Israel accepts the cease-fire agreement

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை 40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

Advertisment

இதுவரை இந்தப் போரில் 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் குண்டு சத்தங்களுடன் காசா நகர் எங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

Advertisment

இந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக அறிவிப்புகளை இஸ்ரேல் வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்துப் போர் நிறுத்தம் தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “போர்நிறுத்தம் குறித்த ஒப்பந்தத்தைப் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுள்ளார். ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் பிணையக் கைதிகளை விடுவித்தால் போர் நிறுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் உறுதியளித்தார். ஹமாஸ் அமைப்பும் இதனை ஏற்றுக்கொண்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போர் நிறுத்தத்தை உடனடியாக அமலாக்க அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்றார்.

அண்மையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து புதிய தலைவராக யாஹ்யா சின்வார் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஹமாஸ் எந்த மாதிரியான முடிவை எடுக்கும் என்று தெரியவில்லை. ஹமாஸ் அமைப்பின் முடிவைப் பொறுத்தே, போர் நிறுத்தப்படுமா? அல்லது தொடருமா? என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது. தற்போது ஹமாஸின் முடிவுக்காகச் சர்வதேச நாடுகள் காத்திருக்கிறது.

Advertisment