Skip to main content

உரிமைக்காக உயிர்விட்ட இளம்பெண்... 38 ஆண்டுகால சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவந்த ஈரான் அரசு...

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

ஈரான் நாட்டில் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது இளம்பெண் ஒருவரின் மரணம்.

 

iran allows women to enter football stadium

 

 

சஹர் கோடயாரி என்ற அந்த 28 வயது பெண் ஈரான் நாட்டின் பெண்கள் உரிமைக்காக போராடியபோது, இஸ்லாமிய மரபுகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார். பின்னர் இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திலேயே தீக்குளித்தார் சஹர். இப்படி அவர் உயிரைவிட்டு போராடியது, பெண்களும் கால்பந்து மைதானத்திற்கு சென்று நேரில் போட்டிகளை பார்க்க வேண்டும் என்பதற்காகவே.

ஈரான் நாட்டில் 1981-ம் ஆண்டு முதல், பெண்கள் கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்து விளையாட்டை ரசிப்பதற்கு தடை இருக்கிறது. ஆரம்பகாலம் முதல் இதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு இருந்தாலும், சமீபத்தில் ஈரான் அரசின் இந்த சட்டத்திற்கு எதிரான விமர்சனங்கள் அதிகமாயின. இந்த நிலையில், இதற்காக போராடிய சஹர் கோடயாரி அந்நாட்டு மக்களால் 'புளு கேர்ள்' (அவருடைய விருப்பமான கால்பந்தாட்ட அணியின் சீருடை நிறம்) என்று  அழைக்கப்பட்டார்.

சஹர் கோடயாரி, கடந்த மார்ச் மாதம் ஆண் வேடமிட்டு மைதானத்துக்குள் நுழைய முயன்றபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் 6 மாதங்கள் நடந்த இந்த வழக்கின் முடிவில், அவருக்கு  6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று தெரியவந்தது. இந்தநிலையில் நீதிமன்ற வளாகத்திலேயே அவர் தீக்குளித்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் மாதம் உயிரிழந்தார்.

இந்த இறப்பு அந்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சஹரின் மரணத்துக்குப் பிறகு விளையாட்டு மைதானங்களில் பெண்களை அனுமதிக்கக் கோரிய போராட்டம் வலுப்பெற்றது. இது உலக நாடுகள் பலவற்றிலும் எதிரொலித்தது. சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பான பிஃபா அமைப்பும் மக்கள் பக்கம் நின்றது. இதனையடுத்து தற்போது வேறு வழியில்லாமல், அந்த சட்டத்தை நீக்குவதாக ஈரான் அறிவித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து ஈரானில் இனி நடைபெறும் கால்பந்தாட்ட போட்டிகளை அந்நாட்டு பெண்கள் மைதானங்களுக்கு சென்று காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி; சாதனை படைத்த அண்ணாமலை பல்கலைக்கழக அணி 

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Annamalai University's record-setting team at khelo India Games

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கேலோ - இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கால்பந்து அணி 2வது முறையாக வெற்றிபெற்றுள்ளது.

அசாம் மாநிலம் கவுஹாத்தில் தேசிய அளவில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கேலோ-இந்தியா விளையாட்டுப் போட்டிகள், கடந்த பிப்ரவரி 19 முதல் 29 வரை நடைபெற்றது. இதில் 700க்கும் மேற்பட்ட  இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 8 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றனர். அந்த வகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக கால்பந்து பெண்கள் அணி, கால்பந்து போட்டிகளில் பங்கேற்று விளையாடியது.

இந்த கால்பந்து லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக அணி அரை இறுதிக்கு முன்னேறியது. அதில், அரையிறுதி போட்டியில் சென்னை பல்கலைக்கழக அணியை, அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி (2-0) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து. இறுதிப் போட்டியில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருநானக் தேவ்பல்கலைக்கழகம் அணியை (3-2) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. கேலோ-இந்தியா போட்டிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Annamalai University's record-setting team at khelo India Games

வெற்றி பெற்ற கால்பந்து அணி வீராங்கனைகள் இன்று (01-03-24) மதியம் ரயில் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு  திரும்பினார்கள். அப்போது, சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த வீராங்கனைகளை, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் அனைவருக்கும் மாலை அணிவித்து மேளதாளங்களுடன் வாழ்த்தி வரவேற்றார்.

இந்நிகழ்வில் உடற்கல்வித் துறை இயக்குநர் ராஜசேகரன், பொறியியல் புல முதன்மையர் கார்த்திகேயன், கல்வியியல் புல முதன்மையர் குலசேகர பெருமாள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் துணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், துணைவேந்தரின் நேர்முகச் செயலர், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் ஊழியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Next Story

பெங்களூருவில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு கால்பந்து போட்டி!

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Football match on MGR's birthday in Bengaluru

பெங்களூர் ஸ்ரீ ராமபுரம் டாக்டர் அம்பேத்கர் மைதானத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு கால்பந்து போட்டி மாநில அளவில் நடைபெற்றது. இந்த கால்பந்து போட்டியை சாந்தி நகர் சட்டமன்ற உறுப்பினர் ஹாரீஸ் துவக்கி வைத்தார்.

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாநில செயலாளர் கே. குமார் தலைமையில் ஒளி வெள்ளத்தில் (Flood Light) நடைபெற்ற கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற சி ராமாபுரம் கால்பந்து வீரர்கள் முதல் பரிசை தட்டிச் சென்றனர். முதல் பரிசாக இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. குக்ஸ் டவுனை சார்ந்த வீரர்கள் இரண்டாவது பரிசினை பெற்றனர். அவர்களுக்கு பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அணியினருக்கு கழக கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு கோப்பைகளையும் பரிசையும் வழங்கினார். எம்.எஸ்.வி. அஸ்வித் சவுத்ரி, சுரேஷ் சந்திரா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த கால்பந்து போட்டிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.