இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பல் காற்றில் 5 கி.மீ. உயரத்திற்குப் பரவியுள்ளது.
உலகின் மிகப்பெரிய தீவு நாடான இந்தோனேசியா நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை அழிவுகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்று. அந்த வகையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை தற்போது வெடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு காரணமாக வானில் சுமார் 5,000 அடி உயரத்தில் புகை மற்றும் சாம்பல் பரவியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சுற்றியுள்ள ஐந்து கிலோ மீட்டர் தொலைவுவரை உள்ள மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வெடிப்பு தொடரும்பட்சத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் லாவா குழம்பு வரக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், எரிமலையின் சீற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களில் எரிமலை வெடிப்பு காரணமாக சுமார் 30,000க்கும் அதிகமான மக்கள் இப்பகுதியிலிருந்து வெளியேறி உள்ளதாகக் கூறப்படுகிறது.