Skip to main content

கரோனா கட்டுப்பாடுகளால் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள்...

Published on 20/03/2020 | Edited on 21/03/2020

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரசின் பரவலைத் தடுக்க பல்வேறு உலகநாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்தவகையில் இந்திய அரசும் பல்வேறு நாடுகள் உடனான விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளது. இதனால் இந்தியர்கள் பலரும் பல்வேறு நாடுகளில் சிக்கித்தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. 

 

indians stuck in foreign countries amid corona virus outbreak

 

 

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது. சீனாவில் 80,967 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளது. இந்நிலையில் பெரும்பாலான நாடுகளுடனான விமானப் போக்குவரத்தை இந்தியா நிறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பியச் சுதந்திர வர்த்தக சங்க அமைப்பில் உள்ள நாடுகள், துருக்கி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பயணிப்பது 2020 மார்ச் 18 முதல் தடைசெய்யப்பட்டது. இந்த நாடுகளில் உள்ள இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கும் இந்த தடை பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. மேலும், சீனா, கொரியா, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா கடந்த வாரம் அறிவித்தது. அவர்களின் உடல்நிலையைப் பொறுத்து அவர்களை மூன்று வகையாகத் தனிமைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவிலிருந்தும் பயணிகள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு இந்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை தடை விதித்தது. பெரும்பான்மையான வெளிநாட்டினருக்கான விசா வழங்குவதை ஏற்கனவே இந்திய அரசு ரத்து செய்துள்ள சூழலில், அனைத்து சர்வதேச பயணிகள் விமானங்களும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு வாரத்திற்குத் தரையிறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் இந்த திடீர் அறிவிப்புகளால் பல்வேறு நாடுகளிலும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.

ஏற்கனவே சீனா, ஈரான், இத்தால், ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளுக்கு விமானங்கள் அனுப்பப்பட்டு, அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். அதேபோல இத்தாலியில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்டவர்களை மீட்க நாளை இந்தியாவிலிருந்து ரோம் நகருக்கு விமானம் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளிலும் இந்தியர்கள் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கு இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்