Advertisment

அமெரிக்கா அதிபர் டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவு; அதிர்ச்சியில் இந்தியர்கள்!

Indians in shock for US President Trump's order

அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், நேற்று முன் தினம் (20-01-25) இந்திய நேரப்படி இரவு 10:30 மணியளவில் அதிபராக பதவியேற்றார். அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற டிரம்ப்புடன் சேர்த்து 50வது துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில், உலகெங்கிலும் உள்ள பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.

Advertisment

இந்த பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார். அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும் அறிவிப்பு, உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவு, சட்டவிரோத குடியேற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள் என அதிரடி உத்தரவுகளை அறிவித்தார். அதன்படி, தனது ஓவல் அலுவலகத்தில் 26 முக்கிய நிர்வாக உத்தரவுகளில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். இதில், பல உத்தரவுகள் முந்தைய அமெரிக்க அரசுகள் கடைப்பிடித்த கொள்கைகளில் இருந்து முற்றிலும் விலகும் வகையில் இருந்தன.

Advertisment

அந்த வகையில், பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை வழங்கும் மிகப்பழமையான திட்டத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாமாக குடியுரிமை வழங்கும் சட்டம் கடந்த 1868ஆம் ஆண்டில் இருந்து வருகிறது. இந்த சட்டத்தை ரத்து செய்து டிரம்ப் போட்ட உத்தரவில், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தை குடியுரிமை பெற குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அமெரிக்க குடிமகனாக, சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளராக அல்லது அமெரிக்க ராணுவத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை தவிர்த்து, தந்தை அமெரிக்க குடிமகனாக இல்லாவிட்டாலோ, தாய் சட்டவிரோதமாக குடியேறியவர் என்றாலோ, சட்டப்பூர்வமான நிரந்தர குடியுரிமை இல்லாதவர் என்றாலோ அல்லது மாணவர் சுற்றுலா விசாவில் வந்திருப்பவர் என எப்படி இருந்தாலும் அங்கு பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எச்1பி விசா போன்ற சட்டப்பூர்வ குடியேற்றம் கொண்டவர்களுக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எச்1பி விசா மூலம் அமெரிக்கா சென்றுள்ள இந்தியர்கள் மற்றும் கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தாமாக குடியுரிமை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது நிரந்தர குடியுரிமைக்கான கீரின் கார்டுக்காக 10 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் காத்திருக்கும் நிலையில் இந்த புதிய சட்டம் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

America indians
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe