மியான்மார்நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு,ஆங் சான் சூகி உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இந்தியாவும் மியான்மரின் நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் மியான்மரில் உள்ள இந்திய தூதரகம், அங்குள்ள இந்தியர்களை தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஏதேனும் உதவியோ அல்லது தகவலோ தேவைப்பட்டால் தூதரகத்தை அணுகுமாறும் இந்தியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மியான்மரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மியான்மரில் மீண்டும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.