Advertisment

ஐ.நா.சபையில் இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு

India votes against Israel in UN

Advertisment

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை அழித்து உலகத்தில் இருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகளில் குடியேற்றங்களை ஏற்படுத்தும் இஸ்ரேலின் செயல்பாடுகளை கண்டித்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தில் இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 7 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன. அதே சமயம் 18 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளன. இதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி உடனடியாக காசாவில் மனிதாபிமான போர்நிறுத்தம் அமல்படுத்த வேண்டும் என ஐ.நா.வின் பொதுச் சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்திற்கு 120 உறுப்பு நாடுகள் ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும், இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் வாக்களிக்காமலும் தவிர்த்த நிலையில், தற்போது இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

India israel palestine
இதையும் படியுங்கள்
Subscribe