Skip to main content

வெடித்த வன்முறை; கலவரத்திற்கு இடையில் மயிலை திருடிய இம்ரான் ஆதரவாளர்

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் நேற்று (09.05.2023) இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்கு ஆஜராக வந்த நிலையில் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் வைத்து இம்ரான் கானை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் அதிரடியாக கைது செய்தனர்.

 

பாகிஸ்தான் ராணுவம் குறித்து அவதூறாகப் பேசியது உட்பட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்து வந்த நிலையில் இந்த கைது சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் பல்வேறு இடங்களிலும் அவரது கைதுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் போராட்டச் சூழலில் பல இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. லாகூரில் உள்ள ராணுவத் தளத்தின் சுவரை இடித்து போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதேபோல் அரசு வானொலி நிலையம் சூறையாடப்பட்டுள்ளது. பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் பயங்கர மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் இம்ரான்கான் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. லாகூரில் உள்ள ராணுவ வீரர்களின் தங்குமிடத்தில் புகுந்த இம்ரான் ஆதரவாளர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிலும் ராணுவ அதிகாரியின் வீட்டில் இருந்து இம்ரான்கான் ஆதரவாளர் மயிலை திருடிக்கொண்டு சென்ற காட்சிகளும் வெளியாகியுள்ளது.

 

தொடர்ந்து பதற்றங்களை சமாளிப்பதற்காக பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவாமல் இருப்பதற்காக இஸ்லாமாபாத்தில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இம்ரான்கான் வெளியிட்டுள்ள வீடியோவில் 'தான் சிறையில் அடைக்கப்படலாம்; தான் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !