கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாட்களுக்கு நடை பெறும் இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் இம்ரான்கான் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்க வந்த அரசுத் தலைவர்கள் நின்றபடி, அடுத்தடுத்து வரும் அரசுத் தலைவர்களுக்கு வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் இந்த நெறிமுறைக்கு மாறாக, இம்ரான்கான் நேராக சென்று தமது இருக்கையில் அமர்ந்து கொண்டார். பிறகு சிறிதுநேரம் கழித்து எழுந்து நின்ற இம்ரான்கான் மீண்டும் இருக்கையிலேயே அமர்ந்து கொண்டார். அயல்நாட்டு தலைவர்களுக்கு இம்ரான் கான் மரியாதை தரவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
ஏற்கனவே இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க சவூதி அரேபியா சென்றபோதும் இம்ரான்கான் நெறிமுறைகளை மீறியதாக கண்டனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.