Skip to main content

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் - பணிந்த ஈரான் அரசு

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

hijab issue iran government abolished special police force

 

ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக  மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதையொட்டி, 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, பெண்கள்  ஹிஜாப் ஆடை அணிவதைக் கண்காணிக்கும் சிறப்புக் காவல் படையை  ஈரான் அரசு தற்போது கலைத்துள்ளது.

 

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி உறவினர்களைச் சந்திக்கச் சென்ற 22 வயதான மாஸா அம்னி என்ற பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று கைது செய்யப்பட்டார். பின்னர் சிறப்புப்  படை காவல் அதிகாரிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை, அவரது பெற்றோரிடம் கொடுக்காமல் காவல்துறையினரே அடக்கம் செய்ததாகவும், அதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

 

இந்த போராட்டங்களில் பங்கேற்ற பலரும், பல்வேறு காரணங்களால் உயிரிழந்த நிலையில், ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்  சர்வதேச அளவில் எதிரொலித்தது. பெண் பிரபலங்கள் பலரும் பொது மேடைகளில் முடிகளைக் கத்தரித்தும், ஆடைகளைக் குறைத்தும், டிவிட்டரில் கண்டனங்களைப்  பதிவிட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

கத்தாரில் நடைபெற்று வரும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், இங்கிலாந்து  உடனான போட்டியில் ஈரான் அணி கால்பந்து வீரர்கள், தங்கள் தேசிய கீதத்தைப் பாடாமல் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ரசிகர் ஒருவர் ஈரான் பெண்களுக்கு ஆதரவாக டி ஷர்ட் அணிந்து மைதானத்தில் ஓடினார். இப்படி பல்வேறு வகையில் ஈரானைச் சேர்ந்தவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

இரண்டு மாதங்களுக்கு மேலாக  மக்கள் புரட்சி வெடித்து வரும் நிலையில், அந்நாட்டில் அமலில் உள்ள ஆடை கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்துவது அல்லது மாற்றுவது குறித்து  ஈரான் அரசும், நீதித்துறையும் ஆலோசித்து வருகிறது. இதனிடையே மதம் சார்ந்த  மாநாடு ஒன்றில் பேசிய அந்த நாட்டின் அட்டர்னி ஜெனரல் முஹமது ஜாபர் மண்டேசெரி, ஹிஜாப் சர்ச்சைக்குக் காரணமான சிறப்புக் காவல் படையை நீக்கி விட்டதாகத் தெரிவித்தார். இந்த கண்காணிப்பு படைக்கும், நீதித்துறைக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்றும், இதனை  2006 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் மொஹமது  அஹாமடிநெஜாத் அறிமுகம் செய்தாக தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பெண்கள் ஹிஜாப் அணிந்தால் எப்படி சுவாசிக்க முடியும்?” - பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
jaipur BJP MLA says How can women breathe if they wear hijab?

கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஆண்டு பா.ஜ.க ஆட்சியின் போது, உடுப்பி மாவட்டத்தின் ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் காவி துண்டை அணிந்துகொண்டு வந்தனர். இதனால், தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பிறகு இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்று, தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது. 

இதனையடுத்து ஹிஜாப் தடையை திரும்ப பெற கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்தார். உடை, சாதி அடிப்படையில் மக்களை பிரிக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது என குறிப்பிட்டுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த பாஜக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில், ஜெய்ப்பூரில் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அது தற்போது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த பள்ளியில் சமீபத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவினை சிறப்பிப்பதற்காக சிறப்பு விருந்தினராக பா.ஜ.க எம்.எல்.ஏ பாலமுகுந்த் ஆச்சார்யா அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி, பாலமுகுந்த் ஆச்சார்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக அப்பள்ளிக்கு சென்றார். 

அப்போது அவர், அங்கு ஹிஜாப் உடை அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளிடம், “ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது. ஹிஜாப் அணிந்திருந்தால் எப்படி சுவாசிக்க முடியும்” என்று ஆட்சேபனைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியதோடு ஹிஜாப்பை கழற்றுமாறு கூறியுள்ளார். இதை, இஸ்லாமிய மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க எம்.எல்.ஏ பாலமுகுந்த் ஆச்சார்யா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

ஈரான் மீது பாகிஸ்தான் பதிலடி தாக்குதல்; அதிகரித்த பலி எண்ணிக்கை

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Pakistan retaliates against Iran

பாகிஸ்தானில் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தையொட்டி, ஈரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய எல்லைகளை பகிர்ந்து வருகின்றன. இந்த நிலையில், பலுசிஸ்தான் பகுதியில் ஈரான் - பாகிஸ்தான் எல்லையையொட்டி 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குஹிசாப் நகரை குறிவைத்து கடந்த 16ஆம் தேதி ஈரான் ராணுவத்தின் சிறப்பு படையினர் ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வீடுகள் பல தரைமட்டமாகி, கட்டடங்கள் பல இடிந்தும் விழுந்தன. மேலும், இந்த சரமாரி தாக்குதலில், கட்டட இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாக கூறப்பட்டது.

இந்த திடீர் தாக்குதல் குறித்து ஈரான் செய்தி நிறுவனம் ஒளிபரப்பியதாவது, ‘பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-அல்-அட்ல் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் அமைத்திருந்த போர்த்தளங்கள், முகாம்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது எனவும், இதில் 2 பயங்கரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டது’ என்றும் தெரிவித்தது. 

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நாட்டின் வான்வெளியில் ஈரான் அத்துமீறி நுழைந்து தாக்கியுள்ளது. எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நடத்தப்பட்ட ஈரானின் இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தாக்குதலுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும்’ என்று கூறி எச்சரித்தது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு மீதான தாக்குதலில் ஈரானுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்திருந்தது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்லால் கூறுகையில், “இது ஈரானுக்கும்-பாகிஸ்தானுக்கு இடையிலான விவகாரம். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற சமரசமற்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தங்களது தற்காப்புக்காக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம்” என்று கூறினார். 

இந்த நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் ஈரானில் இருந்து செயல்படும், இரண்டு பலூச் பிரிவினைவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன், ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 பேர் ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.