Skip to main content

"என்னுடைய பெயரை தவறான வழியில் பயன்படுத்துகின்றனர்"... க்ரெட்டா குற்றச்சாட்டு....

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

உலகநாடுகள் பங்குபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் 74வது பொதுக்கூட்டத்தில் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களை கடுமையாக விமர்சித்து இணைய உலகில் பிரபலமானவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமியான க்ரெட்டா தன்பெர்க்.

 

greta thunberg files for trademark to her name

 

 

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி ஸ்வீடன் நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தி உலக மக்களின் கவனத்தை இவர் பெற்றார். அதன்பின்னர் 'பிரைடேஸ் பார் பியூச்சர்' என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் உலகம் முழவதும் சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார். இதனையடுத்து கடந்த ஆண்டு ஐ.நா வில் இவரின் உரையும் உலக அளவில் பெரும் ஆதரவை பெற்றது.

இந்நிலையில் தனது பெயரையும், பிரைடேஸ் பார் பியூச்சர் அமைப்பின் பெயரையும் சிலர் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதற்காக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். "பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் ஆகியோரை தொடர்பு கொள்வதற்காக சிலர் என்னையும், என்னுடைய பெயரையும் தவறான வழியில் பயன்படுத்த முயல்கின்றனர். சிலர் என் பெயரையும் என் இயக்கத்தின் பெயரையும் பயன்படுத்திப் பணம் ஈட்டி வருகின்றனர்" என கூறியுள்ள க்ரெட்டா, இதன் காரணமாக தனது பெயருக்கும், தனது அமைப்பின் பெயருக்கும் காப்புரிமை பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதின் எதிர்ப்பாளருக்கு நோபல் பரிசு - கல்வியாளர்கள் பரிந்துரை!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

nobel prize

 

இயற்பியல், மருத்துவம், இலக்கியம், அமைதி, வேதியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்த பங்களிப்பை அளிப்போருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பரிசுக்கான பரிந்துரைகளை, இதற்கு முன் நோபல் பரிசு வென்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் செய்யலாம். இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுக்கு 329 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்தப் பரிந்துரை பட்டியலில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் க்ரெட்டா தன்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரும், அந்த நாட்டின் அதிபர் புதினை கடுமையாக எதிர்த்து வருபவருமான அலெக்ஸி நவல்னி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரஷ்யாவை ஜனநாயகமாக்கும் அமைதியான முயற்சிகளுக்காக அந்த நாட்டு கல்வியாளர்களால் அலெக்ஸி நவல்னி பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உலக சுகாதார நிறுவனமும் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏழைநாடுகள் கரோனா தடுப்பூசியைப் பெற, உலக சுகாதாரம் நிறுவனம் எடுத்து வரும் முயற்சிகளுக்காக, அந்த நிறுவனம் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான நோபல் பரிசை வெல்பவர்கள், யார் யார் என்பது வரும் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும்.

 

 

Next Story

மேலோட்டமான ஆதாரங்கள்; மறுப்பதற்கு காரணமில்லை! - திஷா ரவிக்கு 'ஜாமீன்'!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

disha ravi

 

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்திவருகின்றனர். அப்போராட்டத்திற்கு ஆதரவாக, பல்வேறு வெளிநாட்டுப் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். அந்தவகையில் விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் போராளி க்ரேட்டா தன்பெர்க், விவசாயிகள் போராட்டத்தை எப்படி நடத்தலாம் என்ற வழிமுறைகள் அடங்கிய ஆவணம் (toolkit) ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். ஜனவரி 26 ஆம் தேதி, விவசாயிகள் போராட்டத்தில் கலவரம் வெடித்த நிலையில், க்ரேட்டா தன்பெர்க் பகிர்ந்த டூல்கிட் மீது, டெல்லி வன்முறைக்குக் காரணமாக இருந்ததாக வழக்குப் பதிவுசெய்தனர்.

 

அதனைத் தொடர்ந்து, 22 வயதான இந்தியச் சூழலியல் ஆர்வலர் திஷா ரவி, க்ரெட்டா தன்பெர்க் பகிர்ந்த ஆவணத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர் எனவும் அவரே அந்த ஆவணத்தை க்ரெட்டாவுடன் பகிர்ந்துகொண்டார் எனவும் அவருக்குக் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுடன் தொடர்பு உள்ளதாகவும் கூறி டெல்லி போலீஸார் அவரைக் கைது செய்து போலீஸ் காவலில் சிறையில் அடைத்தனர். அதன்பிறகு அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அதேநேரம் ஜாமீன் கோரியும் திஷா ரவி மனுத் தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரம் திஷா ரவியை ஒருநாள் போலீஸ் காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இந்தநிலையில் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மிகக் குறைவான, மேலோட்டமான ஆதாரங்களை வைத்து பார்க்கையில், எந்த குற்றப்பின்னணியும் இல்லாத 22 வயது பெண்ணுக்கு ஜாமீன் மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.