Skip to main content

ஜூன் 2021 வரை வீட்டிலிருந்தே பணிபுரியலாம்... ஊழியர்களுக்குச் சலுகை அளித்த கூகுள் நிறுவனம்...

Published on 28/07/2020 | Edited on 28/07/2020

 

google extends work from home

 

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை வீட்டிலிருந்தே பணிபுரிய தங்களது நிறுவன ஊழியர்களுக்கு அனுமதி அளித்துள்ளது கூகுள் நிறுவனம். 

 

கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள முடக்க நிலை காரணமாக, உலகம் முழுவதும் மென்பொருள் மற்றும் தகவல் தொடர்பு துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளன. கடந்த நான்கு மாதங்களாக லட்சக்கணக்கான ஐ.டி. ஊழியர்கள் இந்த முறையிலேயே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பல முன்னணி நிறுவனங்களும், இதேபோன்று வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை அடுத்த ஆண்டு வரை தொடர்வதாக அறிவித்து வருகின்றன. அந்தவகையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை வீட்டிலிருந்தே பணிபுரிய தங்களது நிறுவன ஊழியர்களுக்கு அனுமதி அளித்துள்ளது கூகுள் நிறுவனம்.

 

இதுதொடர்பாக தங்களது ஊழியர்களுக்குக் கூகுள் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், "ஊழியர்கள் தங்களின் வருங்கால செயல்பாடுகளைத் திட்டமிட்டுக் கொள்ளும் வகையில்,  வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் அலுவலகம் வந்து பணியாற்றத் தேவையில்லாத பொறுப்பில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும், ஜூன் 30, 2021 வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊழியர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு தந்த கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Google CEO Sundar Pichai gave a shocking announcement to the employees!

உலகின் முன்னனி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் தான் கூகுள் நிறுவனம். கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்து வருகிறார். 

இதற்கிடையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்தது. அப்போது, இது பேசுபொருளாக அமைந்தது. இந்த பணிநீக்க நடவடிக்கையை தொடர்ந்து, 2024ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து,  கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நிறுவனத்தின் செயல்பாட்டை எளிதாக்குவதற்கான சில அடுக்குகளை நீக்க வேண்டியது காலத்தின் அவசியம். அதனால், இந்த ஆண்டும் பணி நீக்கங்கள் தொடரும். இந்த பணி நீக்க நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அடுக்குகளை நீக்குவதாக இருக்கும். ஆனால், இந்த பணி நீக்கம் கடந்தாண்டின் அளவிற்கு இருக்காது. அதே போல், இது அனைத்து துறையிலும் இருக்காது” என்று தெரிவித்தார். 

கூகுள் நிறுவனங்களில் கடந்தாண்டு சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் பணிநீக்க நடவடிக்கை தொடரும் என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியிருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.