கரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த முடக்கத்தில், வீட்டிலிருந்து பணிபுரியும் பலரும் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் Zoom. இந்த மென்பொருளைத் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fdzdff.jpg)
கரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஐ.டி துறையில் பணியாற்றும் பெரும்பாலானார் வீட்டிலிருந்தே பணிபுரியும் சூழல் இன்று உருவாகியுள்ளது. அப்படி வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்கள் பலரும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் மற்றவர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் தொடர்புகொள்ள உபயோகிக்கும் ஒரு மென்பொருள்தான் Zoom.
அலுவலகப் பணிகள் சார்ந்த சந்திப்புகளுக்கு, நண்பர்களுடன் கலந்துரையாடுவதற்கு என பலதரப்பட்ட காரணிகளுக்காக இந்த மென்பொருள் உலகம் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில், கூகுள் நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்கள் யாரும் இந்த மென்பொருளைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
கடந்த வாரம், கூகுள் நிறுவனம் இதுதொடர்பாக தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், Zoom மென்பொருளில் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதால், ஊழியர்கள் மடிக்கணினிகளில் இந்த மென்பொருள்இருந்தால் அதன் சேவை இந்த வாரத்தோடு நிறுத்தப்படும் என அறிவித்திருந்தது. கடந்த மாதம், மதர்போர்ட் நிறுவனம் நடத்திய ஆய்வில், ஐபோன் மற்றும் ஐபாட்களுக்கான Zoom செயலியிலிருந்து குறிப்பிட்ட சில தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது.
இது சர்ச்சையான நிலையில், இந்தச் செயலியின் மூலம் பயனர்களின் மைக்ரோஃபோன்கள் மற்றும் வெப்கேம்களை ஹேக்கர்கள் கட்டுப்படுத்தி ஆப்பிள் ஐமாக்கினை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலும் எனக் கண்டறியப்பட்டது. இந்த இரண்டு விஷயங்களும் Zoom செயலின் பாதுகாப்பு தரம் குறித்துக் கேள்வியெழுப்பியிருந்த நிலையில், கூகுள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே எலன் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் இந்தச் செயலியை தங்கள் நிறுவன ஊழியர்கள் பயன்படுத்தக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)