
அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2024 வரை ஜனநாயகக் கட்சி சார்பில் அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் பொறுப்பு வகித்து வந்தார். கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்த சூழ்நிலையில், திடீரென அப்போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார். இதனை தொடர்ந்து, டொனால் டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்கா அதிபராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில், ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜோ பைடன் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிக வீரியமிக்க இந்த புற்றுநோய் எலும்பு வரை பரவியுள்ளது. இது நோயின் மிகவும் தீவிரமான வடிவத்தைக் குறிக்கும் அதே வேளையில், புற்றுநோய் ஹார்மோன் உணர்திறன் கொண்டதாகத் தோன்றுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரோஸ்டேட் புற்றுநோய் ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோயாகும், அமெரிக்காவில் எட்டு ஆண்களில் ஒருவருக்கு இது கண்டறியப்படுவதாக அமெரிக்க புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் இது மிகவும் சிகிச்சையளிக்கக்கூடியது என்றாலும், ஆண்களில் புற்றுநோய் இறப்புக்கு இது இரண்டாவது முக்கிய காரணமாகும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.