“This is the first time in the history of India” – PM Modi in US Parliament

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி, பின் ஜூன் 24 மற்றும் ஜூன் 25 ஆகிய தேதிகளில் எகிப்து நாட்டிற்குச் செல்கிறார்.

Advertisment

அமெரிக்கப் பயணத்திட்டத்தின் படி இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்தும் விவாதித்தார். முன்னதாக வெள்ளை மாளிகை வந்த பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடன் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். இதனை அடுத்து பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

Advertisment

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக உரையாற்றினார். அவர் கூறுகையில், “அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது எப்போதும் பெரிய மரியாதை. இந்திய பிரதமர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றுவது இதுவே முதல் முறை. 140 கோடி இந்தியர்கள் சார்பாக இந்த அவையில் பேச வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய கவுரவம். இந்திய அமெரிக்க மரபணுவில் ஜனநாயகம் உள்ளது, ஜனநாயகம் மக்களை ஒருங்கிணைக்கிறது. உக்ரைன் ரத்யா போரை முடிவுக்கு கொண்டு வர நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். விரைவில் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறும்.

தீவிரவாதம் மனித குலத்திற்கு எதிரி. அதை ஆதரிக்கும் ஏற்றுமதி செய்யும் அனைத்து சக்திகளையும் நாம் முறியடிக்க வேண்டும். 9/11 நடந்து 20 வருடங்கள் கடந்த பின்னும், மும்பையில் 26/11 தாக்குதல் நடந்து 10 வருடங்கள் கழிந்த நிலையிலும் தீவிரவாதம் இன்னும் குறையவில்லை. அந்த கருத்தியல்கள் புதிய அடையாளங்களை எடுத்துக்கொள்கின்றன. ஆனால் அவர்களின் குறிக்கோள் ஒன்றுதான். தீவிர வாதம் மனித குலத்தின் எதிரி” என்றார். பிரதமர் மோடியின் பேச்சை பாராட்டி உறுப்பினர்கள் பலமுறை எழுந்து நின்று கை தட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.