Firing on former Prime Minister; Continued struggle in Pakistan

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி இம்ரான்கானின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது ஷபாஸ் ஷெரீப் பிரதமராகப் பதவி வகிக்கிறார். அவருக்கு எதிராகப் பொதுக்கூட்டங்களை நடத்திவரும் இம்ரான்கான், உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

Advertisment

இந்நிலையில், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இம்ரான்கானின் கட்சிபோராட்டம், பேரணி ஆகியவற்றைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. பேரணி வாயிலாக தங்கள் எதிர்ப்புகளை இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்தவர்கள் எழுப்பி வந்தனர். இந்நிலையில் பாகிஸ்தானின் வாஸிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நடத்தியபேரணியில் மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இம்ரான்கான் காயமடைந்துள்ளதாகவும், அதேபோல் அவரது கட்சியைச் சேர்ந்த ஏழு பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

Advertisment

இந்நிலையில், இம்ரான்கானின் கார் மீது துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை இம்ரான் ஆதரவாளர்கள் தாக்கும் காட்சி வெளியானது. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், “இம்ரான்கான் மக்களைத் தவறாக வழிநடத்துகிறார். அதனால் அவரைக் கொல்ல முயற்சி செய்தோம். தனக்குப் பின்னால் யாரும் இல்லை” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், இந்தத்தாக்குதலின் பின்னணியில் பிரதமர் உள்ளிட்டோர் இருப்பதாக இம்ரான்கான் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்தது. இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இம்ரான்கான் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆட்சிக்கு எதிராகத்தனது போராட்டத்தைத்தொடரப்போவதாக அறிவித்தார்.

மறுபுறம் இம்ரான்கானின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனப் பாகிஸ்தான் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.