ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவரான முல்லா அப்துல் கனி பரதர், ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அறிவிக்கப்படவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டு பெண்களின் நிலை குறித்து அச்சம் எழுந்துள்ளது. கடந்த முறை நடந்த தலிபான் ஆட்சியைப் போல் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் திணிக்கப்படலாம் என அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையே தலிபான்கள், ஷரியா சட்டத்தின்படி பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில்காபூல்நகரில் நான்கு பெண்கள், பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்களுக்கான சமூக பாதுகாப்பு, வேலை செய்வதற்கான உரிமை, கல்வியுரிமை, அரசியலில் ஈடுபடும் உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி அந்தப் பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோவை ஈரானிய பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் போராட்டம் நடத்தும் பெண்களைச் சுற்றி தலிபான்கள் இருப்பது தெரிகிறது. மேலும் அந்தப் பெண்கள், "எங்களதுஇத்தனை வருட சாதனைகளும், எங்களதுஅடிப்படை உரிமையும் சமரசம் செய்யப்பட்டுவிடக்கூடாது" எனக் கூறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.