Advertisment

“வாழ்வதை விட சாவதே மேல்...” - பத்திரிகையாளர் மரணத்தால் உச்சக்கட்ட பரபரப்பு

Female journalist mysteriously lost life in Bangladesh

Advertisment

வங்கதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. தற்போது வங்கதேசத்தில் வன்முறைகள் குறைந்திருந்தாலும், அநேக இடங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வங்காள தேசத்தில் காஸி - தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி ஆசிரியராகச் சாரா ரஹணுமா என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று இரவு சாரா ரஹணுமா பணிக்குச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், இன்று டாக்காவில் உள்ள ஏரி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறப்பதற்கு முன்பு நேற்று சாரா ரஹணுமா வெளியிட்ட சமூக வலைதளபதிவில், “வாழ்வதை விட சாவதே மேல்...” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், “உன்னை போன்ற ஒரு நண்பர் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. கடவுள் உங்களை எப்போதும் ஆசீர்வதிப்பார். உங்கள் கனவுகள் அனைத்தையும் நிறைவேறும் என்று நான் நம்புகிறேன். நாம் இருவரும் இணைந்து பல விசயங்களை நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தோம். மன்னிக்கவும் அதனை நிறைவேற்ற முடியவில்லை. உனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று தனது நண்பனின் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வஜீத், “இது வங்கதேசத்தில் கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட மற்றொரு கொடூர தாக்குதல்” என்று குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த சாராரின் கணவர் சயத் ஷுவ்ரோ கூறுகையில், “எனது மனைவி நேற்று வேலைக்குச் சென்றார். ஆனால் இரவு வீடு திரும்பவில்லை. அதிகாலை 3 மணியளவில் ஏரியில் அவரது சடலம் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது” என்றார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே வன்முறை களமாக இருக்கும் வங்கதேசத்தில், பத்திரிகையாளரின் மர்ம மரணம் பேரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bangladesh journalist woman
இதையும் படியுங்கள்
Subscribe