Epidemics in Gaza says united nation

Advertisment

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 3 வாரத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை அழித்து உலகத்தில் இருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் காசா நகரில் தொற்று நோய் பரவி வருவதாக பாலஸ்தீன விவகாரங்களுக்கான ஐ.நாநிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. மேலும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த அமைப்பின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில்தஞ்சம் அடைந்துள்ளதாகவும், தெரிவித்துள்ளது. இதனிடையே காசாவில் பல குடியிருப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகி நிர்மூலமாக்கப்பட்டதால், பெருமளவில் பொதுமக்கள் தெருக்களிலும் சாலைகளிலும், தங்கி இருப்பதால், காயங்கள் ஏற்பட்டுத் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.