Advertisment

சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்; 127 பேர் பலி

Earthquake that shook China; 127 people lost their lives

Advertisment

வடமேற்கு சீனாவின் கங்சு, குயின்காய் ஆகிய மாகாணங்களில் நேற்று (19-12-23) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. லிங்சியா செங்குவான் ஜென் என்ற இடத்தில் இருந்து 36 கி.மீ தொலைவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் உள்ள 6,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. நள்ளிரவு நேரம் என்பதால், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஏராளமானோர் உடனடியாக வெளியேற முடியாமல் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். மேலும், பலர் தங்களை வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

இதற்கிடையே, தகவல் அறிந்த மீட்பு படையினர் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு விரைந்தனர். அங்கு சென்ற அவர்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். ஆனாலும், இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 127 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய 500க்கும் மேற்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து, சீன வானிலை அதிகாரிகள் கூறுகையில், ‘6.2 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் உருவானது’ எனத் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் சாலைகள் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.

Advertisment

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் யுன்னான் மாகாணத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 617 பேர் உயிரிழந்தனர். அதற்கு பிறகு தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் தான் மிக மோசமானது என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் குறித்துப் பேசிய சீன அதிபர் ஜின்பிங், “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.

earthquake china
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe