Skip to main content

அந்தமானில் பரபரப்பு: 2 மணி நேரத்தில் 9 நிலநடுக்கங்கள்..

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

அந்தமான் நிக்கோபார் பகுதியில் இன்று காலை முதல் அடுத்தடுத்து 9 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அனைத்து நில அதிர்வுகளும் 4.7 முதல் 5.2 வரை ரிக்டர் அளவுகளில் பதிவானது.

 

earthquake hits andaman and nicobar island

 

இன்று காலை இரண்டு மணி நேரத்திற்குள் இந்த 9 அதிர்வுகள் உணரப்பட்டதால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். காலை 5.14 க்கு ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 என பதிவானது. காலை 6.54 க்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 5.5 என ரிக்டர் அளவுகோலில் பதிவு செய்யப்பட்டது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடர் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் எனினும் 2 மணி நேரத்தில் 9 முறை நில அதிர்வு உணரப்பட்டது அங்கு பரபரப்பான சூழலை உருவாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இது இனப்படுகொலைக்குச் சமம்” - இந்திய அரசை எச்சரிக்கும் ஆர்வலர்கள்!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
andaman and nicobar islands shompen people issue

இந்தியாவின் யூனியன் பிரதேசமாக உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள் வங்கக்கடலில் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 572 குறுந்தீவுகள் உள்ளன. இதில் ஏறத்தாழ 36 தீவுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சில தீவுகளில் இன்னமும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அதன் காரணமாக சில தீவுகள் தடை செய்யப்பட்ட பாதுகாப்பு தீவுகள் என இந்திய அரசால் அறிவிக்கப்பட்டு, அங்கு வெளிநபர்கள் செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

இப்படி தடை செய்யப்பட்ட செண்டினல் பழங்குடியின மக்கள் இருக்கும் தீவுக்கு கடந்த 2018ம் ஆண்டு ஜான் அலன் சாவ் (27) எனும் மத போதகர் ஒருவர் அனுமதியின்றிச் சென்று, அங்கு செண்டினல் பழங்குடியினரால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்ததை அடுத்து சில மாதங்கள் அந்தமானில் இருக்கும் பழங்குடியின மக்கள் குறித்தும் அந்தத் தீவுகள் குறித்தும் பொதுவெளியில் பரவலாக பேசப்பட்டுவந்தது. 

andaman and nicobar islands shompen people issue

தற்போது, இந்திய அரசு மேற்கொண்டுள்ள புதியத் திட்டத்தினால் வங்கக்கடலில் அமைந்துள்ள நிக்கோபார் தீவு குறித்தான பேச்சுகள் எழுந்துள்ளன. 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிக்கோபார் தீவில் 9 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த 9 பில்லியன் டாலர் முதலீடு மூலம் நிக்கோபார் தீவில் ராணுவ முகாம், வணிக மேம்பாடு, சரக்கு துறைமுகம், ராணுவம் மற்றும் பயணிகள் விமானநிலையமும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மெகா திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சீன வளர்ச்சிக்கு எதிராக இந்தியாவின் வளர்ச்சியை நிலை நிறுத்த இந்த மெகா திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இந்தத் தீவை இந்தியாவின் ஹாங் காங் எனும் அளவிற்கு மேம்படுத்தவும் இந்தத் திட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் அங்கு மக்கள் தொகையும் அதிகளவில் பெருகும் என இந்திய அரசாங்கம் எண்ணுகிறது. 

கடந்த 20ம் தேதி இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவின் தெற்கு முனையான நிக்கோபார் தீவில் இருக்கும் இந்திரா பாய்ண்டுக்குச் சென்றுவந்தார். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். 

andaman and nicobar islands shompen people issue

இந்திய அரசின் இந்த முடிவிற்கு தற்போது இயற்கை ஆர்வலர்கள், விஞ்ஞானிகள், சமூக அமைப்புகள் தங்களது கண்டனங்களையும் எதிர்ப்பையும் பதிவு செய்துவருகின்றனர். அந்த எதிர்ப்பில் அவர்கள், இந்தத் திட்டம் அங்கு வசிக்கும் பூர்வக்குடி பழங்குடி மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என அச்சம் கொள்கின்றனர். 

உலகில் உள்ள 13 நாடுகளைச் சேர்ந்த 39 ஆய்வாளர்கள் அவர்கள் அச்சம் குறித்தும், நிக்கோபார் தீவில் வசிக்கும் பழங்குடி இனமான சோம்பென் இன மக்களை காக்கவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள கடிதம்:

மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர் முர்மு அவர்களுக்கு, 

இனப் படுகொலை விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற நாங்கள், இந்தக் கடிதத்தின் மூலம் எங்களின் வருத்தத்தையும் பெரும் கவலையையும் தெரிவிக்க விரும்புகிறோம். இந்திய அரசு நிக்கோபார் தீவில் மேற்கொள்ளப்போகும் திட்டத்தின் மூலம், அங்கு வசிக்கும் பழங்குடி சமூகமான சோம்பென் இனம் அழியும் அபாயம் ஏற்படும். இந்தியாவின் ஹாங் காங் எனும் அழைக்கப்படும் திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்துவது, சோம்பென் இனத்தை இனப்படுகொலை செய்வதற்கு சமம். இயற்கையும் வளமும் நிறைந்த நிக்கோபார்த் தீவில் பல நூற்றாண்டுகளாக சோம்பென் பழங்குடி மக்கள் வெளியுலக தொடர்பு ஏதும் இன்றி அமைதியான வாழ்வை வாழ்ந்துவருகின்றனர். 

andaman and nicobar islands shompen people issue

ராணுவ முகாம், வணிக மேம்பாடு, சரக்கு துறைமுகம், ராணுவம் மற்றும் பயணிகள் விமானநிலையம், தொழிற்பேட்டை, எரிசக்தி நிலையம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவது சோம்பென் இன மக்களுக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு சமம். இது சர்வதேச இனப்படுகொலையாக கருதப்படும். இந்தத் திட்டத்தின் மூலம், அந்தத் தீவில் 8,000% அளவிற்கு அதாவது, 6,50,000 வரை மக்கள் தொகை கூடும். அதேசமயம், பூர்வக்குடி மக்களான சோம்பன் இன மக்கள் தொகை கடும் அழிவை சந்திக்கும். 

சோம்பென் இன மக்களுக்கு மற்றொரு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கப்போவது, குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட அவர்களிடத்தில் நம்மிடமிருந்து பரவக்கூடிய தொற்று எளிதில் அவர்களை பாதிக்கக்கூடும். இதன் மூலம் அவர்கள் பெரும் அளவில் மரணிக்க நேரிடும். அவர்களை அழிவில் இருந்து காப்பதற்கு இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும். எனவே நாங்கள், இந்திய அரசையும், இது தொடர்புடைய அதிகாரிகளையும் இந்த மெகா திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். எனத் தெரிவித்துள்ளனர். 

இப்படியான எதிர்ப்புகள் எழுந்துவரும் நிலையில், ஒன்றிய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பனண்டா சோனாவால், எதிர்ப்புகள் எழுவது உண்மைதான் ஆனால், நாங்கள் அதற்கு விளக்கம் கொடுத்துவிட்டோம். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் மாற்று சிந்தனையே இல்லை. என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், எதிர்ப்புகள் வந்தாலும் இந்திய அரசு நிச்சயம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் என்பது உறுதியாகியுள்ளது. 

அதேபோல் பழங்குடியினர் நல அமைச்சர் அர்ஜூன் முண்டா, “இந்தத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் பல்வேறு அமைச்சகங்களால் மிகவும் தீவிரமாகப் பார்க்கப்பட்டது. அந்த இடம் மற்றும் அந்த மக்களின் புனிதத்தன்மையைப் பேணுவதற்கு இந்தத் திட்டம் மிகுந்த முன்னெச்சரிக்கைகளுடன் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

அந்தமான் அருகே நிலநடுக்கம்!

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
 Earthquake near Andaman

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று (01-01-24) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

ஹோன்சு அருகே 13 கி.மீ ஆழத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்து சுனாமி எச்சரிக்கை அந்நாட்டுக்கு விடுக்கப்பட்டிருந்தது. அதில், டோயாமா, இஷிகவா, நிகாடா, ஹையோகா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த சுனாமியானது, சுமார் 5 மீட்டர் உயரத்துக்குத் தாக்கக்கூடும் என்றும் கூறியிருந்த நிலையில், 1 முதல் 5 மீட்டர் அளவுக்கு சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அந்தமான் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. கேம்ப்பெல் பே இல் என்ற இடத்திலிருந்து 487 கிலோ மீட்டர் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும், மேற்கு வங்காளத்தில் உள்ள அலிபுர்துவார் என்ற இடத்தில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ரிக்டர் அளவில் பதிவானதாக நில அதிர்வு கண்காணிப்பிற்கான தேசிய மையம் அறிவித்துள்ளது.