Drone Incident on Israeli Prime Minister's house

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியுள்ளது. அந்த அமைப்பு இஸ்ரேல் மீது குண்டுவீசித் தாக்குதல், ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் என இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறித்து வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது.

Advertisment

இதற்கிடையே ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி (31.07.2024) ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இவர் ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த நிலையில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்தது. டெஹ்ரானில் உள்ள இஸ்மாயில் ஹனியா வீட்டைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இதனையடுத்து ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டார்.

Advertisment

இதையடுத்து, காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக நேற்று முன்தினம் (17-10-24) இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்தார். இருப்பினும் ஹமாஸ் தரப்பில் இருந்து யாஹ்யா சின்வார் உயிரிழந்தது பற்றி தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டை குறிவைத்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லெபனான் நாட்டில் இருந்து, சிசேரியா பகுதியில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் வீட்டிற்கு அருகே உள்ள கட்டடத்தில் ட்ரோன் மோதியதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடைபெற்ற பகுதியில் பிரதமரும், அவரும் மனைவியும் இல்லாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உள்பட எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Advertisment