Skip to main content

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்; மீண்டும் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் டொனால்ட் டிரம்ப்

Published on 22/05/2025 | Edited on 22/05/2025

 

 Donald Trump stirs up controversy again on India-Pakistan ceasefire

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்தது. 

இந்த தாக்குதலை நிறுத்தியது அமெரிக்கா தான் என்றும், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா - பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்தினேன் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா அதிபர் விட்ட எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தானுடனான தாக்குதல் நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புகொண்டதா? என்ற கேள்வி விவாதப் பொருளாக மாறியது. இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு குறித்தும் விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து வருகிறார்.

பாகிஸ்தான் உடனான தாக்குதல் நிறுத்தத்திற்கு பின்னால் வர்த்தகம் தொடர்பான எந்த உரையாடலும் டொனால்ட் டிரம்புடன் நடைபெறவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 13ஆம் தேதி தெரிவித்து டொனால்ட் டிரம்பின் கூற்றை இந்தியா மறுத்தது. இருந்த போதிலும், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா - பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பேசி சர்ச்சையை கிளப்பினார். கடந்த மே 14ஆம் தேதி சவுதி அரேபியாவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது, “இந்தியா - பாகிஸ்தானுக்கும் இடையிலான தாக்குதல் சண்டை எனது தலைமையிலான நிர்வாகம் வரலாற்று சிறப்புமிக்க போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது. போர் நிறுத்தத்தை கொண்டு வர வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன், உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள், அவர்கள் இருவருக்கும், மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களும், வலிமைமிக்க தலைவர்களும் உள்ளனர். அதனால், இந்த தாக்குதல் நிறுத்தப்பட்டது. அது அப்படியே தொடரும் என நம்புகிறேன்” என்று கூறினார். 

 Donald Trump stirs up controversy again on India-Pakistan ceasefire

இந்தியா மறுத்த பிறகும், தாக்குதலை அமெரிக்கா தான் நிறுத்தியது என தொடர்ந்து பேசி வரும் டொனால்ட் டிரம்ப், தற்போது மீண்டும் அதே கூற்றை முன்வைத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அமெரிக்கா வெள்ளை மாளிகையில் தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது பேசிய டொனால்ட் டிரம்ப், “பாகிஸ்தானுடனும் இந்தியாவுடனும் நாங்கள் என்ன செய்தோம் என்பதை நீங்கள் பார்த்தால் - இரு நாடுகளுக்கு இடையிலான மோதலை நாங்கள் தீர்த்து வைத்தோம். நான் அதை வர்த்தகம் மூலம் தீர்த்து வைத்தேன். நாங்கள் இந்தியாவுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்கிறோம், பாகிஸ்தானுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்கிறோம்.

துப்பாக்கிச் சூடு மேலும் மேலும் மோசமாகி, நாடுகளுக்குள் ஆழமாகப் பரவியது. நாங்கள் அவர்களிடம் பேசினோம், அதை நாங்கள் தீர்த்து வைத்தோம் என்று நினைக்கிறேன். பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஏதோ நடக்கிறது, அது டிரம்பின் தவறு என்று அவர்கள் கூறுகிறார்கள். பாகிஸ்தானில் சில சிறந்த மனிதர்கள், உண்மையிலேயே சிறந்த தலைவர் உள்ளனர். இந்தியாவில் என் நண்பர் மோடி, அவர் ஒரு சிறந்த மனிதர். நான் அவர்கள் இருவரையும் அழைக்கிறேன். நாங்கள் பெரிய ஒன்றைச் செய்தோம்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்