donald Trump public warning The Middle East will become hell

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் பெண்கள் சிறுவர்கள், முதியவர்கள் என்று 250க்கும் மேற்பட்ட இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

Advertisment

இதனிடையே பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை இந்தப் போரில் 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது.

Advertisment

போர் நிறுத்தம் செய்யுமாறு ஹமாஸ் அமைப்பையும், இஸ்ரேலையும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இரண்டு பேரும் அதற்குச் செவிசாய்க்காமல் தொடர்ந்து தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கின்றனர். இதனிடையே கடந்த ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டின் காரணமாக, 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், 150க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் தற்போதுவரை ஹமாஸின் கட்டுப்பாட்டிலேயே உள்ளனர். இந்த சூழலில்தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ட்ரம்ப் நான் பதவி ஏற்பதற்குள் பிணையக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்; அப்படி இல்லாவிட்டால் வரலாற்றில் இதுவரை கண்டிராத பாதிப்பை ஹமாஸ் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், “மிக விரைவில் ஹமாஸ் அனைத்து பிணயகைதிகளை விடுவிக்க வேண்டும். இல்லை என்றால், அது ஹமாஸுக்கு நல்லதாக இருக்காது. ஏன் உலகத்திற்கும் கூட நல்லதாக இருக்காது. இனி நான் அதைபற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் முன்பே அனைவரையும் விடுவித்திருக்க வேண்டும். அவர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி இருக்கவே கூடாது. இஸ்ரேலில் உள்ளவர்கள் என்னை அழைத்து பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கெஞ்சுகிறார்கள். ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் சில அமெரிக்கர்களின் தாய்மார்கள் என்னிடம் கதறி அழுகின்றனர். நான் பதவியேற்று 2 வாரத்திற்குள் பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் செய்யாவிட்டால் மத்திய கிழக்கே நரகமாகிவிடும்” என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

Advertisment

அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற்ற நிலையில் வரும் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.