ADVERTISEMENT

"பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்தது செல்லாது"- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

09:33 PM Apr 07, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை, அதன் முக்கிய கூட்டணி கட்சியான எம்கியூஎம்கட்சி திடீரென வாபஸ் பெற்றுள்ளது. இதனால் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது.

மொத்தம் 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், 172 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும். ஆனால் எம்கியூஎம். கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டிருப்பதால், இம்ரான் கான் அரசுக்கான ஆதரவு 164 ஆக குறைந்துள்ளது. அதே நேரம், எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 3- ஆம் தேதி பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் நடைபெறவிருந்த நிலையில், நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பை நிராகரித்தார்.

அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைக்கவும், உடனடியாக தேர்தல் நடத்தவும், பாகிஸ்தான் அதிபருக்கு பிரதமர் இம்ரான் கான் பரிந்துரைச் செய்தார். இதையடுத்து, நாடாளுமன்றத்தை கலைப்பதாக பாகிஸ்தான் அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இதனை எதிர்த்து, பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தை நாடினர். இது தொடர்பான, வழக்கு இன்று (07/04/2022) விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டனர். அதன்படி, பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைத்தது செல்லாது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் மீண்டும் செயல்படுவதற்கும் தடையில்லை. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வரும் ஏப்ரல் 9- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் துணை சபாநாயகரின் உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT