Skip to main content

கரோனாவைத் தடுக்க வழிபாடு... ஒரே பாட்டிலில் கொடுக்கப்பட்ட புனித நீரால் 46 பேருக்கு கரோனா பாதிப்பு...

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

தென் கொரியத் தேவாலயம் ஒன்றில் கரோனாவைத் தடுப்பதற்காக நடத்தப்பட்ட வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் 46 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

corona virus spreaded in southkorean church

 

 

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 7,171 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 129 பேரைப் பாதித்துள்ளது.

கரோனாவால் சீனாவுக்கு அடுத்து கிழக்கு ஆசியாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு தென் கொரியா ஆகும். தென்கொரியாவில் 8000க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் தென்கொரியாவின் சியோங்னம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் சிறப்புப் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்ட 46 பேருக்கு கரோனா இருப்பதை அதிகாரிகள் தற்போது உறுதிசெய்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகத் தேவாலயத்தில் நடத்தப்பட்ட பிரார்த்தனை ஒன்றில் மக்கள் கலந்துகொண்டுள்ளனர். அப்போது அங்கு வந்திருந்தவர்களுக்கு புனித நீர் வழங்கப்பட்டுள்ளது. ஒரே பாட்டில் மூலம் அனைவருக்கும் இந்தப் புனித நீர் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் அந்த புனிதநீரைக் குடித்தவர்களில் 46 பேருக்கு கரோனா இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தேவாலயத்தின் போதகர் மற்றும் அவரது மனைவியும் இதன்மூலம் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 90 பேர் வரை கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் மேலும் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளதால் அதிகாரிகள் அப்பகுதியில் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள அந்த தேவாலய போதகர் கிம், "இங்கு நடந்தது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நான் தான் பொறுப்பு" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்