Controversy over handcuffing searching of Indian student in america

அமெரிக்க விமான நிலையத்தில் இந்திய மாணவர் ஒருவரை, கைவிலங்கிட்டு குற்றவாளியைப் போல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூவார்க் விமான நிலையத்தில் இந்திய மாணவர் ஒருவரை, அமெரிக்க போலீஸ் சோதனை நடத்தியது. அப்போது, அந்த மாணவரை தரையில் படுக்க வைத்து கைவிலங்கிட்டு சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த ஒரு நபர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, ‘இந்திய மாணவருக்கு கைவிலங்கு போடப்பட்டு ஒரு குற்றவாளியைப் போல நடத்தப்பட்டார். அவர் கனவுகளை நோக்கி தான் இங்கு வந்துள்ளார், தீங்கு விளைவிக்க வரவில்லை. இது ஒரு மனித சோகம்’ என்று எழுதியிருந்தார்.

Advertisment

இது தொடர்பான வீடியோ வைரலாகியதை அடுத்து, பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ‘வரலாற்றில் முதல் முறையாக இந்தியா இல்லாமல், ஒரு வெளிநாட்டுத் தலைவர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் போர் நிறுத்தத்தை உறுதி செய்ததாக தொடர்ந்து கூறி வருகிறார். கடந்த ஒரு வருடமாக, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடிமக்களும் மாணவர்களும் மீண்டும் மீண்டும் தவறாக நடத்தப்படுகிறார்கள். ஆனால் பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார். அவரால் பேசுவதற்கு தைரியத்தை திரட்ட முடியவில்லை என்று கருத முடிகிறது. பிரதமர் மோடி உடனடியாக அதிபர் டிரம்பிடம் பேசி, அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக நடத்தப்படும் தவறான நடத்தை மற்றும் அட்டூழியங்கள் குறித்து தலையிடுமாறு முறையிட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்’ எனத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டார்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம், ‘நியூவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு இந்தியர் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறும் சமூக ஊடகப் பதிவுகளை நாங்கள் கண்டோம். இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இந்திய குடிமக்களின் நலனுக்காக தூதரகம் எப்போதும் உறுதிபூண்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்ததாவது, ‘அமெரிக்கா எங்கள் நாட்டிற்கு சட்டப்பூர்வமான பயணிகளைத்தொடர்ந்து வரவேற்கிறது. இருப்பினும், அமெரிக்காவிற்குச் செல்ல எந்த உரிமையும் இல்லை. சட்டவிரோத நுழைவு, விசாக்களை துஷ்பிரயோகம் செய்தல் அல்லது அமெரிக்க சட்டத்தை மீறுவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது, பொறுத்துக்கொள்ள மாட்டோம்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்தும் நடவடிக்கையை அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து எடுத்து வருகிறார். அதன்படி, சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணி அமெரிக்கா முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.