/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/america-police-ni.jpg)
அமெரிக்கா நாட்டில் படிக்கும் இந்திய மாணவர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்கா, ஜார்ஜியா மாகாணத்தின் லித்தோனியா நகரில் எம்.பி.ஏ படித்து வந்தவர் இந்தியரான விவேக் சைனி (25). இவர் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி, மர்ம நபர் ஒருவரால் கொடூரமான முறையில் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அமெரிக்கா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்தியரான அகுல் பி. தவான் (18) அதே மாதத்தில் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி 28 ஆம் தேதி பர்டியூ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்தியரான நீல் ஆச்சார்யா காணாமல் போனதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில், அவரைப் போலீசார் தேடி வந்தனர். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அவர் மரணம் அடைந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ஹைதராபாத்தை சேர்ந்த சையத் மஜாகீர் அலி என்ற ஐ.டி. மாணவர் ஒருவர் சிகாகோ நகரில் கடந்த 4 ஆம் தேதி மர்ம நபர்களால் துரத்தி துரத்தி தாக்கப்பட்டார். கொடூரமாகத்தாக்கப்பட்ட சையத் மஜாகீர் அலி, உதவிக்காக கெஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனைத்தொடர்ந்து,ஹைதராபாத்தில் உள்ள தாக்குதலுக்குள்ளான அலியின் குடும்பத்தினர், அவரை சந்திக்க அவசர விசா வழங்கும்படி கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அடுத்த நாளே இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்டியூ பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியலுக்கான முனைவர் படிப்பு படித்து வந்த சமீர் காமத் (23) என்ற இந்திய மாணவர், வாரன் கவுண்டி பகுதியில் நேற்று முன்தினம் (05-02-24) உயிரிழந்து கிடந்துள்ளார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொடர் உயிரிழப்பு சம்பவத்தால் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)