Condemnation of Pakistan for Iran Strikes Camps

Advertisment

பாகிஸ்தானில் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தையொட்டி, ஈரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய எல்லைகளை பகிர்ந்து வருகின்றன.

இந்த நிலையில், பலுசிஸ்தான் பகுதியில் ஈரான் - பாகிஸ்தான் எல்லையையொட்டி 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குஹிசாப் நகரை குறிவைத்து ஈரான் ராணுவத்தின் சிறப்பு படையினர் ஏவுகணைகளைவீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வீடுகள் பல தரைமட்டமாகி, கட்டடங்கள் பல இடிந்தும் விழுந்தன. மேலும், இந்த சரமாரி தாக்குதலில், கட்டட இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாக கூறப்படுகிறது.

இந்த திடீர் தாக்குதல் குறித்து ஈரான் செய்தி நிறுவனம் ஒளிப்பரப்பியதாவது, ‘பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-அல்-அட்ல் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் அமைத்திருந்த போர்த்தளங்கள், முகாம்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது எனவும், இதில் 2 பயங்கரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டது’ என்றும் தெரிவித்தது.

Advertisment

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நாட்டின் வான்வெளியில் ஈரான் அத்துமீறி நுழைந்து தாக்கியுள்ளது. எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நடத்தப்பட்ட ஈரானின் இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தாக்குதலுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும்’ என்று கூறி எச்சரித்துள்ளது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.