தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தை துவக்கி வைக்க சென்னையில் இருந்து ரயில் மூலம் நேற்று (14.07.2025) இரவு சிதம்பரம் வந்தார். இவருக்கு திமுக சார்பில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதனையடுத்து இன்று (15.07.20250 காலை 09.30 மணிக்கு சிதம்பரம் ரயிலடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசு வழங்கும் சேவைகள் எளிமையாக கிடைத்திடும் வகையில் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய திட்டத்தினை பள்ளிக்கு அருகே உள்ள தனியார் திருமண மண்டப வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். அப்போது முகாமில் கலந்துகொண்ட பெண்களிடம் திமுக அரசின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினார். அதன்பின்னர் முகாமில் மனு அளித்த இளைஞர் ஒருவருக்கு காது கேட்கும் கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இத்திட்டத்தில் கீழ் தமிழ்நாடு முழுவதும் நகர்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும், கடலூர் மாவட்டத்தில் நகர்புறப் பகுதிகளில் 130 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 248 முகாம்களும் நடத்தப்பட உள்ளது. முகாம் நடைபெறும் பகுதிகளில் 2 நாட்களுக்கு முன்பாக தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்களின் வீடு வீடாக சென்று முகாம் குறித்த விவரங்களை தெரியப்படுத்துவதோடு, விண்ணப்பங்களும் வழங்கப்பட உள்ளன. மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சாலையில் இருபுறங்களில் கூடியிருந்த மக்களிடம் புகார் மனுக்களை வாகனத்தில் இருந்தவாறு பெற்றுக்கொண்டு வந்த அவர் சிதம்பரம் பெரியண்ணா குளம் அருகே இருந்த அம்பேத்கர் சிலை அரசியல் கட்சிகளின் கொடிகம்பங்களை நெடுஞ்சாலை துறையினர் அகற்றிய போது கொடிகம்பம் பட்டு சிலை உடைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் முதல்வர் வருகையையொட்டி அதே இடத்தில் புதிய முழு உருவ வெங்கல அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது. இதனையும் அவர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பட்டியல் சமூக மக்களுக்காகவே வாழ்ந்து தனது வாழ்வையே அற்பணித்தவருமான எல். இளையபெருமாள் உருவச் சிலையுடன் ரூ. 6.39 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு நினைவு அரங்கத்தை திறந்து வைத்தார்.
இதில் அமைச்சர்கள் கே.என் நேரு, எ.வ.வேலு, எம்ஆர்கே. பன்னீர்செல்வம், சி.வெ. கணேசன், சாமிநாதன், திருமாவளவன் எம்.பி., விஷ்ணு பிரசாத் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை, மூத்த தலைவர் கே.எஸ். அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன், நெய்வேலி சபா ராஜேந்திரன், வேல்முருகன், காட்டுமன்னார்கோயில் சிந்தனை செல்வன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை. மாவட்ட ஆட்சியர் சிபிஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.