Skip to main content

அமெரிக்க அதிபரின் அதிரடி உத்தரவு; பின்னணியில் தப்பி வந்த சீன அமைச்சர்!

Published on 19/06/2021 | Edited on 19/06/2021

 

joe biden

 

கரோனாவின் தோற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. முதலில் கரோனா வுகான் ஆய்வகத்தில் இருந்து வெளியேறிருக்க வாய்ப்பில்லை என கூறி வந்தாலும், தற்போது கரோனா சீனாவின் வுகான் ஆய்வகத்திலிருந்துதான் பரவியிருக்க வேண்டும் என்ற கருத்து பலப்பட்டு வருகிறது.

 

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கரோனா தோற்றம் குறித்து 90 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அந்தநாட்டு உளவுத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்தநிலையில் இந்த உத்தரவின் பின்னணி குறித்து தற்போது தகவல்கள் வெளியாகிவுள்ளது. சீன உளவுத்துறையின் துணை அமைச்சராக இருந்த ஜிங்வெய், தனது மகளுடன் கடந்த பிப்ரவரி மாதம் சீனாவிலிருந்து தப்பி ஹாங்காங் மூலம் அமெரிக்காவிற்கு சென்றதாகவும், அவர் வுகான் ஆய்வகம் குறித்த அனைத்து ரகசியங்களையும் அமெரிக்காவிடம் அளித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஜிங்வெய் அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே, 90 நாட்களில் கரோனா தோற்றம் குறித்து அறிக்கை அளிக்க ஜோ  பைடன் உத்தரவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மார்ச் மாதம் நடைபெற்ற சீன-அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சர்கள் சந்திப்பில், ஜிங்வெய்யை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியதாகவும், அதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முக்கிய தலைவரைக் கொன்ற புதின்? நெருக்கடியில் ரஷ்யா!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
US President Joe Biden said that Putin responsible for Navalny passed away

ரஷ்யாவில் அதிபர் புதின் அரசின் மீது எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். 47 வயதாகும் அலெக்ஸி நவல்னி எதிர்கால ரஷ்யா என்ற புதிய கட்சியை தொடங்கி புதினைத் தொடர்ந்து விமர்சனம் செய்தும், ரஷ்ய மாகாணங்களில் நடைபெறும் ஊழல் குறித்தும் தன்னுடைய இணையப் பக்கத்தில் எழுதி வந்தார். இதனால் ரஷ்ய மக்களிடையே பிரபலமானார். கடந்த அதிபர் தேர்தலில் புதினுக்கு எதிராக அலெக்ஸி நவல்னி போட்டியிட முடிவு செய்திருந்தார். ஆனால் புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் தேர்தலின் போது புதினுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். 

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும் போது அலெக்ஸி நவல்னி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் வைக்கப்பட்டிருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை ஜெர்மனி அரசு உறுதி செய்ததோடு, விஷம் வைக்கப்பட்டதில் ரஷ்ய அரசுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக ரஷ்ய அரசு மறுத்தது. 

இதனைத் தொடர்ந்து 5 மாத சிகிச்சைக்குப் பிறகு ரஷ்யா திரும்பிய அலெக்ஸி நவல்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அலெக்ஸி நவல்னிக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி அவற்றிற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு மேலும் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஷ்யாவில் உள்ள ஆர்க்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அலெக்ஸி நவல்னி உயிரிழந்துள்ளார். சமீப காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் நடைபயிற்சி மேற்கொண்ட போது மயங்கி விழுந்து சிறையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அவரது இறப்பிற்கான காரணம் வெளியிடப்படவில்லை. அலெக்ஸி நவல்னியின் மனைவி, புதின் தான் தனது கணவர் இறப்பிற்கு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு நீதிகேட்டு பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்டு கொலை செய்துவிட்டார். இது ரஷ்ய அரசின் எதேச்சதிகாரப் போக்கு” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

US President Joe Biden said that Putin responsible for Navalny passed away

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “அலெக்ஸி நவல்னியின் மரணம் குறித்து நான் உண்மையில் ஆச்சரியம் அடையவில்லை. புதின் அரசாங்கம் செய்யும் ஊழல் மற்றும் அனைத்து மோசமான செயல்களையும் அவர் தைரியமாக எதிர்த்தார். பதிலுக்கு, புதின் அவருக்கு விஷம் கொடுத்தார், அவரைக் கைது செய்தார். புதினால் இட்டுக்கட்டப்பட்ட குற்றங்களுக்காக நவல்னியின் மீது வழக்கு தொடர்ந்தார். தனிமைப்படுத்தப்பட்ட அவரைச் சிறையில் அடைத்தார்.  அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு புதின் தான் பொறுப்பு” என தெரிவித்துள்ளார். அலெக்ஸியின் மரணம் தற்போது புதினின் ரஷ்ய அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

உளவு பார்ப்பதாக கைதான புறா; 8 மாதங்களுக்குப் பின் விடுவிப்பு!

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Pigeon arrested for spying and Released after 8 months

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைகள் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து பூதாகரமாகி வருகிறது. அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்க்கும் இது குறித்து பேசியுள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே, சீனா, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 பகுதிகளின் பெயர்களை மாற்றியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தை அந்நாட்டுடன் சேர்த்து வரைபடத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இப்படி மோதல் போக்கு உருவாகி வரும் நிலையில், சீனாவில் இருந்து நம் நாட்டை உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட புறாவை 8 மாதங்கள் சிறையில் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே பிர் பாவ் ஜெட்டி பகுதியில், கடந்த 2022 ஆண்டு மே மாதம் வித்தியாசமாக இருந்த புறா ஒன்று பிடிப்பட்டது. அந்த புறாவின் கால்களில் தாமிரம் மற்றும் அலுமினியத்திலுமான இரண்டு மோதிரங்கள் இருந்தன. மேலும், அந்த புறாவின் இரண்டு இறக்கையின் கீழ் பகுதியில் சீனா மொழியில் எழுதப்பட்ட செய்தி இருந்ததாக கூறப்படுகிறது. 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், சீனாவில் இருந்து உளவு பார்ப்பதற்காக புறா வந்திருப்பதாக சந்தேகமடைந்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக ஆர்சிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த புறா சீனாவில் இருந்து அனுப்பப்பட்டதா? என விசாரணை நடத்தி வந்தனர். மேலும், பிடிப்பட்ட புறாவை மும்பை கால்நடை மருத்துவமனையில் உள்ள கூண்டில் சிறை வைத்தனர். 

இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், பிடிப்பட்ட புறா தைவானில் திறந்தவெளி நீர் போட்டியில் பங்கேற்கும் புறா என்பது கண்டறியப்பட்டது. மேலும், அந்த புறா உளவு பார்ப்பதற்காக வரவில்லை என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, பிடிப்பட்ட புறாவை விடுவிப்பதற்கு போலீசாரிடம் கால்நடை மருத்துவமனை அனுமதி கோரியது. மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்றதை அடுத்து, 8 மாதங்களுக்கு பிறகு பிடிப்பட்ட புறா நேற்று முன்தினம் (30-01-24) விடுவிக்கப்பட்டது.