"பெரும் அழிவை ஏற்படுத்தும்" - ட்ரம்ப் முடிவுக்குச் சீனா எச்சரிக்கை...

china about houstan embassy issue

ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத்தூதரகத்தை மூட உத்தரவிட்ட செயல் எதிர்காலத்தில் பெரும் அழிவை ஏற்படுத்தும் எனச் சீனா எச்சரித்துள்ளது.

அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும், அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்கவும் முன்னுரிமை அளிக்கும் வகையில், சர்வதேச சட்டவிதிகளை மீறி விட்டதாகக் கூறி ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை 72 மணிநேரத்தில் மூட அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், அந்த அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதனைச் சுட்டிக்காட்டிப் பேசிய ட்ரம்ப், தூதரகத்தில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்தில், அங்கிருந்த பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்றுசந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் தீவிபத்து தனக்கு மிகவும் ஆச்சரியம் அளிப்பதாகவும், விரைவில் அமெரிக்காவில் உள்ள மேலும் பல சீனத் தூதரகங்களை மூட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கும் ரகசியத் தகவல்களைச் சீனாவின் ஹேக்கர்கள், சீனத் தூதரகத்தின் உதவியுடன் திருடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறையும் எச்சரிக்கை விடுத்திருந்த சூழலில், தூதரகத்தை மூடும் இந்த உத்தரவை ட்ரம்ப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ட்ரம்ப்பின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் பெரும் அழிவை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. இதுகுறித்து பேசிய சீன வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் வாங் வன்பின், "ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகம் மூடப்பட உள்ளது. இது நியாயமற்ற மற்றும் கண்மூடித்தனமான நடவடிக்கை.

இது அமெரிக்கா-சீனா உறவில் பெரும் அழிவை ஏற்படுத்தும். இந்தத் தவறான முடிவை உடனடியாகத் திரும்பப்பெற சீனா வலியுறுத்தும். அதேபோல இதற்குப் பதிலடியாகச் சீனா உறுதியாக நடவடிக்கை எடுக்கும். அரசியல்ரீதியாக ஆத்திரமூட்டும் நடவடிக்கையாகவே இதைப் பார்க்கிறோம். அமெரிக்கா, சீனா இடையிலான உறவில் சர்வதேச சட்டங்களைத் தீவிரமாக அமெரிக்கா மீறுவதாகவே பார்க்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

America china trump
இதையும் படியுங்கள்
Subscribe