Skip to main content

"கோத்தாபய ராஜபக்சே எந்தச் சூழலிலும் பதவி விலகமாட்டார்" - தலைமைக் கொறடா அறிவிப்பு 

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

gotabaya rajapaksa

 

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு,பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா, அரசுக்கு கூட்டணி கட்சிகள் அளித்துவந்த ஆதரவு வாபஸ் என இலங்கை அரசியலில் ஏற்பட்ட அடுத்தடுத்த திருப்பங்களால் அரசுக்கு நெருக்கடி அதிகரித்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

 

இந்த நிலையில், எந்தச் சூழ்நிலையிலும் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகப்போவதில்லை என இலங்கை நாடாளுமன்றத்தின் தலைமைக் கொறடா அறிவித்துள்ளதாக இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிங்கப்பூரில் இருந்து கோத்தபய ராஜபக்சே வெளியேறியதாக தகவல்!

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

SRILANKA FORMER PRESIDENT gotabaya rajapaksa IN SINGAPORE

 

சிங்கப்பூரில் இருந்து இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அங்கு போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்தன. குறிப்பாக, இலங்கை அதிபர் மாளிகையைச் சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். உளவுத்துறையின் தகவலையடுத்து, அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அவருக்கான விசா காலத்தை அந்நாட்டு அரசு நீட்டித்த நிலையில், தற்போது விசா காலம் முடிந்ததால், விமானம் மூலம் தாய்லாந்துக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

இலங்கையின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்கே, பொருளாதாரத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதனால் அந்நாட்டில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாகத் திரும்பி வருகிறது.

 

Next Story

அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே! 

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

Gotabaya Rajapaksa resigned as President!

 

சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

 

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், ஆவேசமடைந்த பொதுமக்கள் கடந்த வாரம் இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதனால் இலங்கையில் இருந்து குடும்பத்துடன் தப்பி மாலத்தீவில் தஞ்சமடைந்த கோத்தபய ராஜபக்சே, தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால், அது தொடர்பான கடிதத்தை இதுவரை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் அவர் வழங்கவில்லை. 

 

மாலத்தீவிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு, எதிர்ப்பு குரல் எழுந்ததால், அங்கிருந்து குடும்பத்துடன் அவர் சவூதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம், சிங்கப்பூர் சென்றடைந்தார். ஜெட்டா செல்லும் சவூதி ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர் பயணம் செய்ததால், சிங்கப்பூரில் இருந்து சவூதி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியானது. 

 

ஆனால், அவர் தற்போது சிங்கப்பூரிலே தங்கியிருப்பார் என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்கு கோத்தபய ராஜபக்சே வந்துள்ளார்; அவருக்கு அடைக்கலம் தரவில்லை" எனத் தெரிவித்துள்ளது.

 

இந்த நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி, இலங்கையில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான, கடிதத்தை அவர் இலங்கை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.