ADVERTISEMENT

இந்தியாவுடன் மோத விரும்பவில்லை” - கனடா பிரதமர்

03:51 PM Nov 14, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

கனடாவுக்கும், இந்தியாவுக்கும் கடந்த சில காலங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடா நாட்டு குடிமகனாக இருந்த நிஜாரின் படுகொலைக்கு இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

அவரது குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்தது. அந்த நிலையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை கனடாவை விட்டு வெளியேறுமாறு கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், கனடாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், இனவெறி தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் இந்தியா எச்சரித்தது. இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி கனடாவுக்கான விசா சேவையை இந்தியா நிறுத்தியது. மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்கும் சேவைகளை மறு அறிவிப்பு வரும் நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, கனடாவுடனான உறவில் விரிசல் சரியாகும் நிலையில், கனடாவில் இருந்து இந்தியா வர கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி முதல் மீண்டும் விசா சேவையை மத்திய அரசு தொடங்கியது. இதன் மூலம், கனடாவில் இருந்து தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பயணிகள் இந்தியாவுக்கு வர வழிவகை செய்யப்பட்டது.

இந்த பிரச்சனை பற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், “இந்தியாவுடனான சண்டையை கனடா இப்போது விரும்பவில்லை. ஆனால், ஹர்தீப் சிங் நிஜார் கொலை தொடர்பான விசாரணையில் ஒன்றிணைந்து செயல்படுமாறு இந்தியாவை கேட்டுக் கொள்கிறோம். பெரிய நாடுகள் சர்வதேச சட்டத்தை மீறினால், முழு உலகத்திற்கும் ஆபத்தாகி விடும். எனவே, இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட கனடா விரும்புகிறது.

ஆரம்பத்தில் இருந்தே, இந்த விவகாரத்தை இந்திய அரசும், உலக நாடுகளும் தீவிரமாக எடுத்துக் கொள்ள உண்மையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தோம். ஆனால், இந்தியா வியன்னா உடன்படிக்கையை மீறி தூதரக அதிகாரிகள் 40க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பறித்து அவர்களை வெளியேற்றியது. இதனால், நான் ஏமாற்றமடைந்து கவலையடைந்தேன். இது உலகெங்கும் உள்ள உலக நாடுகளுக்கும் கவலை அளிக்கிறது.

ஏனென்றால், ஒரு நாடு மற்ற நாடுகளின் தூதரக அதிகாரிகளை பாதுகாக்காவிட்டால், அது சர்வதேச உறவுகளுக்கு ஆபத்தாக மாறிவிடும். அதனால், ஒவ்வொரு நடவடிக்கைகளிலும், இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாகவும், நேர்மறையாகவும் பணியாற்றி முயற்சித்தோம். தொடர்ந்து அவ்வாறே செயல்படுவோம். இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். அதனால், நாங்கள் இப்போது சண்டை செய்ய விரும்பவில்லை. ஆனால், சந்தேகத்திற்கு இடமின்றி எப்போதும் சட்டத்தின் ஆட்சிக்காக சண்டை செய்வோம்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT