businessman Elon Musk resigns from the Trump administration

கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றுக் கொண்டார். இந்த அதிபர் தேர்தலில், உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓவான எலான் மஸ்க், டொனால்ட் டிரம்புக்கு ஆதராவாக பிரச்சாரம் செய்தார். மேலும், இந்த தேர்தலை எதிர்கொள்ள டொனால்ட் டிரம்புக்கு ஆயிரக்கணக்கான கோடியை எலான் மஸ்க் செலவிட்டதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாகவே, டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார் என்று தகவல் வெளியாகியிருந்தது.

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தனது அரசாங்க செயல்திறன் துறையின் தலைவராக (DOGE) எலான் மஸ்க்கை டிரம்ப் நியமித்தார். இது, அந்நாட்டில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DODGE) தலைவராகப் பொறுப்பேற்றப் பிறகு, அரசின் தேவையற்ற செலவை கண்டுபிடித்து அதனை கட்டுப்படுத்தும் வேலையை செய்து வந்தார். அதில், அரசுத் துறையை ஒட்டுமொத்தமாக கலைத்துவிட்டு புதிதாக உருவாக்க வேண்டும் என்று கூறினார். ஏற்கெனவே அமெரிக்க அரசுத் துறை ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்து அவர்களை எலான் மஸ்க் வெளியேற்றி வந்த நிலையில், எலான் மஸ்கின் இந்த கருத்து அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

Advertisment

எலான் மஸ்க் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும், அமெரிக்க மக்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. எலான் மஸ்கிற்கு எதிராகவும், டெஸ்லா நிறுவனத்திற்கும் எதிராகவும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. அதன் ஒரு பகுதியாக, எலான் மஸ்கின் டெஸ்லா ஷோரூம்கள், கார்கள் மற்றும் சார்ஜிங் ஸ்டேசன் உள்ளிட்டவைகள் மீது அதிகளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களுக்குப் பின்னால் உள்நோக்கம் இருப்பதாகக் கருதப்பட்டது. இந்த செயலை கண்டிக்கும் விதமாக, எலான் மஸ்கின் டெஸ்கா ஆட்டோமொபைல் நிறுவனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்துபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

businessman Elon Musk resigns from the Trump administration

இந்த சூழ்நிலையில், பல்வேறு பொருளாதார செலவினங்களை மாற்றியமைக்கும் ‘பிக் பியூடிஃபுல்’ (Big Beautiful) சட்ட மசோதாவை கொண்டு வர டொனால்ட் டிரம்ப் நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வருகிறார். ஆனால் இந்த மசோதா, பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிக்கும் என்றும், DOGE குழுவின் பணியை குறைத்து மதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் எலான் மஸ்க் தெரிவித்தார். முதல் முறையாக டொனால்ட் டிரம்பின் முடிவுக்கு மாற்று கருத்து சொன்ன எலான் மஸ்க், தற்போது ‘DOGE’ அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து எலான் மஸ்க் தெரிவித்துள்ளதாவது, “சிறப்பு அரசு ஊழியராக எனது திட்டமிடப்பட்ட பணிக் காலம் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில், வீண் செலவுகளைக் குறைப்பதற்கான வாய்ப்பிற்காக அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அரசாங்கம் முழுவதும் வாழ்க்கை முறையாக மாறும்போது DOGE நோக்கம் காலப்போக்கில் வலுப்பெறும்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.