Skip to main content

ஒரு வெண்கல கிண்ணத்தின் விலை 34 கோடியா..! ஆச்சரியத்தில் மக்கள்...

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

டென்னிஸ் பந்துகளை போட்டு வைப்பதற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெண்கல கிண்ணம் ஒன்று இந்திய மதிப்பில் 34 கோடி ரூபாய்க்கு ஏலம் போன அதிசயம் சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்துள்ளது.

 

bronze bowl sold for 34 crore rupees in auction held at hongkong

 

 

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சீனாவுக்கு சுற்றுப் பயணம் செய்த போது அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஒரு வெண்கலக் கிண்ணத்தை வாங்கி வந்துள்ளனர். அதனை வாங்கிய நிலையில் அது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கிண்ணம் என் அவர்களுக்கு தெரியவர, அதனை நல்ல விலைக்கு விற்க முயற்சித்துள்ளனர்.

இதற்காக பல இடங்களில் கேட்டும் யாரும் அதனை வாங்க முன்வரவில்லை. பின்னர் இதனை ஏலம் விட முயற்சித்த போதும் எந்த ஏல நிறுவனமும் இதனை விற்க முன்வரவில்லை. எனவே வேறு வழியின்றி இந்த கிண்ணத்தை வீட்டில் டென்னிஸ் பந்துகள் வைக்க பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்தக் கிண்ணத்தைப் பற்றி இடைத்தரகர்கள் மூலமாக கேள்விப்பட்ட ‘கொல்லெர்’ என்ற ஏல நிறுவனம் அக்குடும்பத்தினரிடம் இருந்து வெண்கலக் கிண்ணத்தை வாங்கியது. கிண்ணத்தின் மதிப்பை அறிந்த இந்த நிறுவனம், அதனை நேரடியாக ஹாங்காங் எடுத்து சென்று அங்கு ஏலம் விட்டது. இதில் அந்தக் கிண்ணம் ரூ.34 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

இத்தகவலை ‘கொல்லெர்’ ஏல நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. டென்னிஸ் பந்துகள் போட வைத்திருந்த அந்த கிண்ணம் 34 கோடிக்கு ஏலம் போயுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கை கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு இளம்பெண் கொடூரக் கொலை!

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

Foreign woman passed away in Delhi

 

டெல்லியில் சித்திரவதை செய்யப்பட்டு வெளிநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

டெல்லி திலக் நகர் பகுதியில் உடலில் சித்திரவதை செய்த அடையாளங்களுடன் வெளிநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற டெல்லி போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். அந்த பெண்ணின் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, கண்கள் பிதுங்கிய நிலையிலும், உடலில் தீயால் சுட்ட காயங்களும், இருந்துள்ளன. மேலும் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதற்கான தடையங்களும் இருந்துள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆராய்ந்து பார்த்துள்ளனர். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக  குர்பிரீத் என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்த பெண் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், குர்பிரீத் சுவிட்சர்லாந்தில் வைத்துச் சந்தித்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  

 

இந்த நிலையில்தான் சம்பவத்தன்று, அவருடைய கை, கால்களைக் கட்டிப் போட்டு கொலை செய்து பழைய கார் ஒன்றில் வைத்திருக்கிறார். நாளடைவில் உடலிலிருந்து துர்நாற்றம் வெளிவரவே, சாலையோரம் உடலை வீசிவிட்டுத் தப்பித்துச் சென்றிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணிற்கும், குர்பீரித்திற்கும் என்ன தொடர்பு என்றும், ஏன் அவரை கொடூரமாகக் கொன்றார் என்பது குறித்தும் காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளாரா என்பதும் தெரியவரும் என போலீசார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

பெங்களூருவில் வானில் ஏற்பட்ட திடீர் சத்தம்... அலறியடித்து ஓடிய மக்கள்.. காரணம் என்ன..?

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

sonic boom in bengaluru

 

பெங்களூருவில் இன்று மதியம் ஏற்பட்ட திடீர் சத்தத்தை நிலநடுக்கம் என நினைத்து மக்கள் சாலைகளில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பெங்களூரில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் வைட்ஃபீல்ட் பகுதிக்கு அருகில் ஒரு மிகப்பெரிய சத்தம் கேட்டது. நகரின் பல பகுதிகளிலும் இந்தச் சத்தம் உணரப்பட்டதால் அச்சமைடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்தனர். ஐந்து விநாடிகள் வரை இந்தச் சத்தத்தை உணரமுடிந்ததாக பெங்களூரு மக்கள் சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதனை நிலநடுக்கம் என மக்கள் கூறிவந்த நிலையில், இது நிலநடுக்கம் அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் சத்தத்திற்கு விமானப்படை விமானங்கள் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 


இந்தச் சம்பவத்தில் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என பெங்களூரு நகர போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், விமானம் செல்லும் போது ஏற்படும் 'சோனிக் பூம்' எனும் நிகழ்வின் காரணமாக இந்த மிகப்பெரிய சத்தம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக போர் விமானங்கள் ஒலியை விட வேகமாகப் பயணிக்கும் போது, காற்றின் அதிர்வால் மிகப்பெரிய சத்தம் ஏற்படுவதே 'சோனிக் பூம்' என அழைக்கப்படுகிறது. எனவே, இதுவும் அதுமாதிரியான ஒரு நிகழ்வாகவே இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை உறுதி செய்வதற்காக பெங்களூரு போலீஸார் விமானப்படை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். இருப்பினும் மிகப்பெரிய சத்தத்தைக் கேட்டு நிலநடுக்கம் என நினைத்து மக்கள் சாலைகளில் கூடியதால் பெங்களூருவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.