
கடந்த ஓராண்டாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இலங்கையில் ஒரு சவரன் தங்க நகை ஒருலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு பிரெட் பாக்கெட் 200 ரூபாய்க்கும்விற்பனை ஆகிறது. இந்த அளவுக்கு நிதி சிக்கலைச் சந்தித்துள்ள இலங்கைக்குக் கூடுதல் பொருளாதார பாரத்தை கூட்டியுள்ளது உக்ரைன்-ரஷ்ய போர். இந்தநிலையில் இந்தியாவின் உதவியை நாடியுள்ளது இலங்கை. இதற்காக இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே டெல்லி வந்துள்ள நிலையில், பிரதமர் மோடியை சந்தித்து கூடுதலாக 7,500 கோடி ரூபாய் கடனுதவி வழங்கமாறு கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியானது.

அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துவரும் நிலையில் உணவு, எரிபொருள் உள்ளிட்டவற்றை வெளிநாடுகளிலிருந்து வாங்கமுடியாத நிலையில் உள்ளது இலங்கை. இதனால் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கே இலங்கை மக்கள் தள்ளாடி வருகின்றனர். இந்தியா ஏற்கனவே இலங்கைக்கு கடந்த மாதம் 3,700 கோடி ரூபாய் கடனளித்திருந்த நிலையில், இலங்கையின் இந்த கோரிக்கையை ஏற்கலாமா இல்லையா என்பது குறித்து மத்திய அரசு இன்று முடிவெடுக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா கொடுக்கப்போகும் கடன் தொகையைக் கொண்டு மருந்து, எரிபொருள், உணவு ஆகியவற்றை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது இலங்கை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)