A boy in Gaza who eats dirt without food

கடந்த 15 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் போர், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் தலையீட்டின் காரணமாக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பணயக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை, ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து விடுத்து வந்தனர். பதிலுக்கு, பாலஸ்தீன கைதிகளையும் இஸ்ரேல் தொடர்ந்து விடுவித்தது.

இந்த போர் முடிவுக்கு வந்தது என உலக மக்களும், பாலஸ்தீன மக்களும் பெருமூச்சு விட்ட நிலையில், மீண்டும் இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதே சமயம், இந்த போரால் பெரிதும் பாதிக்கப்படும் காசாவில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் காசா மக்கள் வாழ்வா? சாவா போராட்டத்தில் இருக்கின்றனர். அங்கு உணவில்லாமல் மக்கள் குறிப்பாக குழந்தைகள் தவித்து வரும் நிலையில் கடந்த திங்கள்கிழமை அன்று காசா மனிதாபிமான அறக்கட்டளை வழங்கிய உணவுப் பொருளை வாங்கச் சென்ற 17 அப்பாவி பொதுமக்களை இஸ்ரேல் இராணுவம் சுட்டுகொன்றது.

Advertisment

இந்த நிலையில் காசாவில் உணவில்லாமல், மண்ணை சாப்பிடும் சிறுவனின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.அந்த வீடியோவில், “உண்ண உணவில்லை, மண்ணை சாப்பிடும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டீர்கள். இது சரியா.. சிறிதேனும் இரக்கம் காட்டுங்கள். எங்களின் பசியை போக்க மாவு பொருட்கள் வேண்டும். ஒவ்வொரு நாளும் உதவிப்பொருள்கள் கொண்டு வரும் ட்ரக்கை பார்த்து ஓடுகிறோம். இந்த நிலை என்றுதான் மாறும்...” என்று கண்ணீருடன் சிறுவன் மண்ணை உண்ணும் காட்சி காண்போரையும் கலங்க வைத்துள்ளது.