கிரிப்டோகரன்சியின் வரலாற்றில், பிட்காயினின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு இன்று (05-12-24) 1,00,000 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு பிட்காயினின் விலை ரூ.87 லட்சமாகும். சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் கிரிப்டோ-நட்பு ஒழுங்குமுறை சூழல் குறித்து முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில் பிட்காயினின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிட்காயினின் மதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. டொனால்ட் டிரம்பின் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த நான்கு வாரங்களில் சுமார் 45% உயர்ந்துள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கிரிப்டோ தலைநகராக அமெரிக்கவை மாற்றுவதாக டொனால் டிரம்ப் உறுதியளித்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதால், முன்னேற்றம் காணத் துவங்கிய கிரிப்டோகரன்சி சந்தை, தொடர்ந்து உயர்வுப் பாதையிலேயே நீடிக்கிறது. பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றாகும். இந்த பணத்தை உலகின் பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் போது பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.