“சிந்து நதியில் தண்ணீர் ஓடவில்லை என்றால், ரத்தம் ஓடும்” - பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை

bilawal bhutto wearing if water does not flow Indus River, only blood will flow

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். பஹல்காம் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்திற்கும், தங்களுக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்று பாகிஸ்தான் கூறினாலும், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் சில பயங்கரவாத அமைப்பு தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று இந்தியா சந்தேகிக்கிறது. அந்த பயங்கரவாத அமைப்பை, பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரிப்பதாக கூறி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு அதிரடி முடிவுகளை இந்தியா தொடர்ந்து எடுத்து வருகிறது.

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும், வாகா எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும், சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்துள்ளது. இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு எதிராக, இந்தியா உடனான சிம்லா ஒப்பந்தம் ரத்து, அட்டாரி எல்லை மூடல் உள்ளிட்ட முடிவுகளை பாகிஸ்தான் எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டங்களும் எதிர்ப்புகள் வலுத்துள்ளது.

இந்த நிலையில் சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்களின் ரத்தம் தான் ஓடும் என பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “சிந்து நதி எங்களுடையது, அது எங்களுடையதாகவே இருக்கும். சிந்து நதியில் நமது தண்ணீர் ஓடும், இல்லையென்றால் அவர்களின் ரத்தம் ஓடும்” என்றார்.

இதனைக் கண்டித்துள்ள மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, அதற்கான விலையை பாகிஸ்தான் கொடுக்க வேண்டியிருக்கும். இது வெறும் ஆரம்பம்தான். பிலாவல் பூட்டோ ஒரு முட்டாள். அவருக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், அவர் இப்படித்தான் கத்திக் கொண்டே இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

India kasmir Pakistan indus river Pahalgam
இதையும் படியுங்கள்
Subscribe