
விழுப்புரம் மாவட்டம் டி.எடையார் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் அருண் (21). விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ வரலாறு படித்து வந்த அருணின் இருசக்கர வாகனம் காணாமல் போனது. இது தொடர்பாக அருண் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது இருசக்கர வாகனத்தை திருடியதில் தனது கிராமத்தைச் சேர்ந்த 4 பேரின் மீது சந்தேகம் இருப்பதாக கூறிய, அருண் அவர்களுடன் செல்போனில் பேசிய குரல் பதிவை போலீசாரிடம் ஆதாரமாகக் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அந்த கிராமத்திற்குச் சென்ற போலீசார் வீரமணி, சத்தியா, சரத்ராஜ், கீர்த்தி வர்மன் ஆகிய நான்கு பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் இரு சக்கர வாகனத்தை நாங்கள் திருடவில்லை என அவர்கள் போலீசாரிடம் கூறியதையடுத்து போலீசார் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர். தங்கள் மீது புகாரளித்த அருண் மீது ஆத்திரம் கொண்ட நான்கு பேரும் மேலும் சில கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு 'இருசக்கர வாகனத்தை நாங்கள் தான் திருடினோம் அதைத் திருப்பி தருகிறோம் நாங்கள் சொல்லும் இடத்திற்கு வா' எனக் கூறியுள்ளனர்.
மாணவன் அருணும் அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்ற நிலையில் பணப்பாக்கம் ஏரிக்கரையில் வைத்து அருணின் கழுத்தை நெரித்து கொலை செய்த அந்த கும்பல் அருணின் ஆடைகளைக் களைந்து உள்ளாடைகளுடன் சடலத்தை பணப்பாக்கம் ஏரியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றனர்.
இக்கொலையில் ஈடுபட்ட கும்பலில் இருந்த சத்தியா என்ற இளைஞன் கிராமத்திற்கு வந்து போதையில் கொலை செய்ததை உளறியுள்ளான். உடனடியாக கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த கும்பலை அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் கொலை செய்து பணப்பாக்கம் ஏரியில் வீசப்பட்ட அருணின் சடலத்தை போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டதில் இன்னும் பல நபர்களுக்கு தொடர்பு இருப்பதால் அவர்களை கைது செய்ய வேண்டும், அதுவரை மாணவனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது என வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)