Skip to main content

"கைகுலுக்க முடியாது"... சிரிப்பலைகளை ஏற்படுத்திய அமைச்சரின் பிடிவாதம்... வைரலாகும் வீடியோ...

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் காரணமாக அச்சம் எழுந்துள்ள சூழலில், கரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக பல்வேறு நாட்டு அரசாங்கங்களும், கைகுலுக்குதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டுமென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், ஜெர்மனியில் நடைபெற்ற அமைச்சர்கள் உடனான கூட்டத்தில் ஜெர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு, அந்நாட்டு உள்துறை அமைச்சர் கைகொடுக்க மறுத்தது சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

 

Angela Merkel was refused a handshake by German Minister

 

 

சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து, ஈரான், அமெரிக்கா, இத்தாலி என பல உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 60 நாடுகளில் இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலான நாடுகளில் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில், கைகுலுக்குதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் ஆகியவை தவிர்த்து வரப்படுகின்றன.

இந்நிலையில், ஜெர்மனியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல், அங்கு அமர்ந்திருந்த உள்துறை அமைச்சருக்கு மரியாதை நிமித்தமாக கைகுலுக்க கைகளை நீட்டினார். ஆனால் அமைச்சரோ, கொரோனா தற்பாதுகாப்புக்காக கைகொடுக்காமல் தலையை மட்டுமே அசைத்து மரியாதையை தெரிவித்தார். இதனைக் கண்டு புரிந்துகொண்ட  ஏஞ்சலா மெர்க்கலும், தனது சிரிப்பை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் சிரித்தபடியே, தலையை அசைத்து மரியாதை செய்தார். மேலும், "தாங்கள் செய்தது சரிதான்" என கூறி அமைச்சரையும் பாராட்டினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்; ஜெர்மனி விரையும் சிறப்பு புலனாய்வுக் குழு!

Published on 03/05/2024 | Edited on 03/05/2024
Prajwal Revanna Affair; Germany rushes special intelligence team

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டு இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதன்படி பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை புகாரை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அதோடு பிரஜ்வாலை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கர்நாடக  மாநில போலீஸ் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதி இருந்தது. 

Prajwal Revanna Affair; Germany rushes special intelligence team

இத்தகைய சூழலில் ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு தணிக்கை குழு புதியதாக வழக்கைப் பதிவு செய்துள்ளது. மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமைக்கான சட்டப்பிரிவும் எஃப்.ஐ.ஆரில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு ஜெர்மனி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பிரஜ்வால் கைது செய்யப்படுவது உறுதி எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணா தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “வாய்மையே வெல்லும். தற்போது நான் பெங்களூரில் இல்லை என்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது. இது குறித்து தனது வழக்கறிஞர் மூலம் பெங்களூரு போலீசாரிடம் தகவல் தெரிவித்துவிட்டேன்” எனக்  குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கோவி ஷீல்டை அடுத்து கோவாக்சின்; தயாரிப்பு நிறுவனம் கொடுத்த விளக்கம்

Published on 02/05/2024 | Edited on 02/05/2024
Covaccine after Covid Shield; Description given by the manufacturer


கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள். இந்தத் தொற்றை கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் பல்வேறு ஆய்வுகளை செய்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற தீவிர முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இதில், இந்த நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை வழக்கத்தில் கொண்டு வந்து அதை மக்களும் தவறாமல் போட்டு வந்தனர். கோவாக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. அதே போல், மற்றொரு தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்டிராஜெனேகா நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கண்டுபிடித்தது.

இதில், கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிஷீல்டை, மத்திய அரசு அனுமதியுடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் தயாரித்தது. இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் 70 சதவீதம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டு வகையான தடுப்பூசிகளை, உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தினர். இதனால், இந்த நோய்த் தொற்று பரவலாக குறைந்து வந்து மக்களை பெருமூச்சடைய செய்தது.

தடுப்பூசிகளைப் பயன்படுத்தி நோய் தொற்றைக் கட்டுப்படுத்தி வந்த அதே வேளையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் மரணங்களும், உடல்நல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக பல புகார்கள் எழுந்தது. இந்தப் புகார்களை அடுத்து, இங்கிலாந்து நீதிமன்றத்தில், கோவிஷீல்டு கண்டுபிடிப்பு நிறுவனமான ஆல்டிராஜெனேகாவுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஆல்டிராஜெனேகா நிறுவனத்தோடு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் சேர்ந்து அறிக்கை ஒன்று தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், ‘கோவிட் தடுப்பூசியான கோவிஷீல்டு சில நேரங்களில் ஏதேனும் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளை தரலாம். ஏதேனும் ஒரு சிலருக்கு இது போன்ற பாதிப்பு வருவது அரிதான விஷயம்தான். ரத்தத்தில் உறைதல் ஏற்படலாம், டிடிஎஸ் எனப்படும் (Thrombosis with Thrombocytopenia Syndrome ) பாதிப்பு வரலாம். இது எல்லோருக்கும் வருவதில்லை, மிக அரிதாக நடக்கலாம்’ எனத் தெரிவித்தது. இது தற்போது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பரிசோதிக்கவும், அதன் பக்க விளைவுகள் மற்றும் அபாய காரணிகளை ஆய்வு செய்யவும் மருத்துவ நிபுணர்கள் குழுவை அமைக்க கோரி வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மேலும் அந்த மனுவில் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க அறிவுறுத்தல்களை வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

Covaccine after Covid Shield; Description given by the manufacturer

இந்நிலையில் மற்றொரு கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா என்ற கேள்வி மற்றும் சந்தேகங்கள் எழுந்திருந்தது. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது. மக்களின் பாதுகாப்பு முக்கியத்துவம் என்பதை மனதில் வைத்து கோவாக்சின் தடுப்பூசி உருவாக்கப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் தடுப்பூசி பாதுகாப்பு குறித்து மதிப்பீடும் செய்யப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசியின் தன்மை தொடர்ந்து கண்காணிக்கப்படும். கோவாக்சின் லைசன்ஸ் நடைமுறையின் போது சுமார் 27 ஆயிரம் வகைகளில் ஆய்வு செய்யப்பட்டது என அதனைத் தயாரித்த பாரத் பயோ டெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ரத்தம் உறைதல் உள்ளிட்ட எந்த வித பக்க விளைவுகளும் கோவாக்சின் தடுப்பூசியால் ஏற்படாது என்பது உறுதி எனவும் பாரத் பயோ டெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.