ADVERTISEMENT

"சீன கம்யூனிஸ்ட் அதிகாரிகள் நாட்டிற்குள் நுழையக் கட்டுப்பாடுகள்"... அமெரிக்கா அதிரடி அறிவிப்பு...

05:22 PM Jun 27, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள் மீது, அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்த ஹாங்காங் சுதந்திர பகுதியாக அறிவிக்கப்பட்ட பின்பு, அது சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஹாங்காங் பகுதியை நிர்வகிக்க நிர்வாக அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு ஆட்சி நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக நிர்வாக பகுதியான ஹாங்காங்கை தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுவரும் சீனா அதற்கான பணிகளையும் ஹாங்காங் மக்களின் எதிர்ப்பை மீறி செய்து வருகிறது. குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங் மக்கள் போராட்டங்கள் நடத்தி வந்த சூழலில், அந்நகரத்தின் நேரடி அரசியலில் தலையிடும் வகையிலான தேசிய பாதுகாப்பு சட்டத்தைக் கடந்த மாதம் நிறைவேற்றியது சீனா.

ஹாங்காங் நகரத்தின் சிறப்பு சுயாட்சி மற்றும் சுதந்திரங்களை இந்த சட்டம் பாதிக்கக்கூடும் என உலக நாடுகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் சீனாவின் இந்த செயலுக்குப் பதிலடி தரும் வகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, "ஹாங்காங்கின் உயர் சுயாட்சியைக் குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக நம்பப்படும் தற்போதைய மற்றும் முன்னாள் சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கு விசா கட்டுப்பாடுகளை நான் அறிவிக்கிறேன். ஹாங்காங்கின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையிலான செயல்களில் ஈடுபட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை தண்டிப்போம் என அதிபர் ட்ரம்ப் உறுதியளித்திருந்தார். அதனை நாங்கள் இப்போது நிறைவேற்றி இருக்கிறோம்" என தெரிவித்தார். அமெரிக்கா விதித்துள்ள இந்த விசா கட்டுப்பாடுகளால் சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அமெரிக்காவினுள் நுழைவது கடினமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT