Advertisment

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலகநாடுகள்!

russia

Advertisment

ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. இந்தநிலையில் நேற்று ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை அதிபர் புதின் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தார்.

இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த பல்வேறு நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளனர். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐந்து ரஷ்ய வங்கிகள் மீதும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளியான ஜெனடி டிம்சென்கோ உள்ளிட்ட மூன்று பெரும் தொழிலதிபர்கள் மீதும் பொருளாதார தடை விதித்துள்ளார். பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பிரிட்டனில் வைத்துள்ள சொத்துகள் முடக்கப்படும் எனவும், சம்பந்தப்பட்ட நபர்கள் பிரிட்டனுக்கு வர தடை விதிக்கப்படும் எனத்தெரிவித்துள்ள போரிஸ் ஜான்சன், இது முதற்கட்ட தடைகள்தான் எனவும் கூறியுள்ளார்.

அதேபோல் 2 ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த தடை மூலம் ரஷ்யாவால் மேற்கத்திய நாடுகளில் பணம் சம்பாதிக்க முடியாது எனவும், மேற்கத்திய நாடுகளின் சந்தைகளில் வணிகம் செய்யமுடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யாவின் செல்வேந்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

Advertisment

ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவின் 351 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும், 27 ரஷ்ய அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீதும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஜப்பானும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த சில தனிப்பட்ட நபர்கள் மீதும் இந்த தடைகள் விதிக்கப்படும் எனவும், ரஷ்ய பாண்டுகளுக்கும் ஜப்பானில் தடைவிதிக்கப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஆகிய பகுதிகளோடு நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபட கனடா நாட்டு மக்களுக்கு தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஆகிய பகுதிகளை சுதந்திர நாடாக அறிவிப்பதை ஆதரித்த ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும், ரஷ்ய அரசின் வங்கிகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இவை முதற்கட்ட தடைகள் என ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

America britain Russia Ukraine
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe