ADVERTISEMENT

மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவி; எதிர்பாராத விதமாக நடந்த சோகம்

07:17 PM Mar 09, 2024 | mathi23

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

ADVERTISEMENT

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 57,614 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. அதனை அவரே செய்தி சேகரிப்பின் நேரலையில் கூறியது பலரையும் கலங்க வைத்தது.

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த போர் குறித்து ஐ.நா கூறுகையில், ‘இஸ்ரேல் - காசா இடையே நடைபெறும் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க, பட்டினியால் ஏற்படும் உயிரிழப்புகள் நடப்பது கொடுமையாக இருக்கிறது. காசா பகுதியில் 4இல் ஒருவர் பசியால் வாடுகிறார்கள்’ என்று கூறி கவலை தெரிவித்தது. இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, காசா மக்களுக்கு வான்வழி உணவு மற்றும் உதவி பொருட்கள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

அந்த வகையில், நேற்று (09-03-24) காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷாதி என்ற இடத்தில் உள்ள மக்களுக்கு பாராசூட் மூலம் உணவுப் பொருட்களை அமெரிக்கா விநியோகம் செய்து கொண்டிருந்தது. அப்போது, ஒரு பாராசூட் விரியாமல் திடீரென பழுதானது. இதனால் அந்த பாராசூட், உணவுப் பொருட்களுடன் மக்கள் கூடியிருந்த பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் பரிதாபமாக 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து காசா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து, காசா செய்தித் தொடர்புத்துறை கூறுகையில், ‘இந்த திட்டத்தை பற்றி முன்கூட்டியே எச்சரித்தும் அமெரிக்க அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிகள் என்ற பெயரில் எங்கள் மக்களை மேலும் கொல்லாதீர்கள்’ என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT