Skip to main content

670 கி.மீ. கடந்த 22 பெண்கள்; அதிரப் போகும் பாராளுமன்றம்!

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

22 women are struggling for permanent visa for 12 thousand people in Australia

 

போர்முனைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள், சொந்த நாடுகளில் வாழ முடியாத சூழலில் உயிரைப் பணயம் வைத்து வேறு நாடுகளுக்குச் சென்று அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் இலங்கை, ஈரான் போன்ற நாடுகளில் இருந்து மக்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து பல்லாயிரக்கணக்கான கி.மீ கடந்து கடல் வழியாகச் சிறிய ரக கப்பலில் ஆபத்தான முறைகளில் பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா வந்துள்ளனர். அப்படி அகதிகளாக வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த 10, 12 ஆண்டுகளாக நிரந்தர விசா கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

தற்காலிக விசா கிடைத்தாலும் வேலைகள் செய்து அதில் கிடைக்கும் வருவாயில் குடும்பம் நடத்தவே சரியாக உள்ளதால் குழந்தைகளின் படிப்பும், மருத்துவ செலவுக்கும் திண்டாடும் நிலை தான் உள்ளது. விசாரணை முடிந்தாலும் ஏதோ சில காரணங்களால் மீண்டும் முதலில் இருந்து விசாரணை என்கிற போது கூடுதல் செலவு, மன உளைச்சலில் நிம்மதி இன்றி வாழவேண்டி உள்ளது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு நிரந்த விசா தான். நிரந்தர விசா கிடைத்தால் மருத்துவ அட்டையும், குழந்தைகளுக்கான இலவச கல்வியும் கிடைக்கும் என்கிற நிலை.

 

ஆஸ்திரேலிய அரசாங்கத்திடமும் அமைச்சர்களிடமும் 'எங்களுக்கு நிரந்தர விசா வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்த நிலையில், 22 பெண்கள் மெல்போர்னில் இருந்து பாராளுமன்றம் உள்ள கான்பராவுக்கு 670 கி மீ நடைப்பயணத்தை கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கினார்கள். நாளை 18 ஆம் தேதி கான்பரா பாராளுமன்றம் முன்பு கோரிக்கையை வலியுறுத்த வந்துள்ள இந்த நடை பயணக்குழு ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர்.

 

22 women are struggling for permanent visa for 12 thousand people in Australia

 

இந்த கோரிக்கை நடைப்பயணம் குறித்து நடைப்பயணத்தில் உள்ளோர் கூறும் போது, “நியாயமான எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் பயணத்தை தொடங்கினோம். எங்கள் சின்னச் சின்ன குழந்தைகளை கூட வீட்டில் விட்டுவிட்டு நடந்து கொண்டிருக்கிறோம். நடைப்பயணத்தில் கால் வலியால் அவதிப்பட்டோம். ஆனாலும் எங்கள் கோரிக்கையை திட்டமிட்ட நாளில் பாராளுமன்றம் முன்பு கூடி சொல்ல வேண்டும் என்பதால், வலிகளை பொறுத்துக் கொண்டு பயணிக்கிறோம். எங்கள் பயணம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கோரிக்கையும் இறுதிக் கட்டமாக இருக்க வேண்டும். ஷ்யாமளா சசிக்குமார் நடைப்பயணத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் பயணத்தில் கலந்து கொண்டார்.

 

எங்களில் பரமேஸ்வரிமோகன் குழந்தைகள் உட்பட பலர் இந்தியாவில் உள்ளனர். அவர்களை போய் பார்க்கக்கூட எங்களுக்கு பாஸ்போர்ட், விசா எடுக்க முடியாமல் கண்ணீரோடு தவிக்கிறோம். நாளை 18 ஆம் தேதி புதன் கிழமை பல ஆயிரம் பேர் பாராளுமன்றம் முன்பு கூடி நின்று அமைதியான முறையில் எங்கள் கோரிக்கையை அரசாங்கத்திடம் சொல்லப் போறோம்” என்றனர். வழி எங்கும் வலிகள் நிறைந்த இந்த பயணத்திற்கு நிரந்தர விசா மட்டுமே இவர்களுக்கு வலி நிவாரணியாக இருக்கும். மீண்டும் இலங்கைக்கு அனுப்புவோம் என்ற நிலையை அரசாங்கம் மாற்ற வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

கோவிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்; பெண்கள், மாணவிகள் 4 பேர் பலி

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
4 women who went to the temple drowned in the water and passed away

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா( 45) அவரது மகள் லலிதா (22). அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா (18) அவரது 17 வயது தங்கை   உட்பட 4 பெண்கள் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர். வழிபாடு முடிந்த நிலையில் முனீஸ்வரன் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பூர் ஏரியில் உள்ள தண்ணீரில் நான்கு பெண்களும் இறங்கி உள்ளனர் 

ஏரியில் உள்ள சுழலில் சிக்கி நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கி கூச்சலிட்டுள்ளனர். மேலும் நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா, ஆகிய நான்கு பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே பகுதியைச் சேர்ந்த அம்மா, மகள் மற்றும் சகோதரிகள் என நான்கு பெண்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.