14 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத டைனோசர் ஒன்றின் எலும்பு பிரான்ஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஏஞ்சியாக் - சரன்டீ பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த 40க்கு மேற்பட்ட உயிரினங்களின் படிமங்களை அப்பகுதியில் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்தவகையில் சமீபத்தில் ஒரு இடத்தை ஆராய்ச்சி செய்த போது சுமார் 2 மீட்டர் நீளமும், 500 கிலோ எடையும் கொண்ட எலும்பு ஒன்று கிடைத்துள்ளது. அதனை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் சுமார் 14 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு டைனோசரின் தொடை எலும்பு என தெரிய வந்துள்ளது. இது தாவரங்களை உண்ணும் ஒரு வகை டைனோசரின் எலும்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.