world is in a state of tension because America is trying to seize Greenland
கிரீன்லாந்து என்பது டென்மார்க் கீழ் இருக்கும் சுயாட்சி பெற்ற ஒரு பகுதியாகும். இதன் மக்கள் தொகை மிகக் குறைவு எனினும் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாகும். அதே சமயத்தில், கிரீன்லாந்து அமைந்துள்ள இடம் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. இந்த நிலையில், ஆர்டிக் (Arctic) பிராந்தியத்தில் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில், கிரீன்லாந்து யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
கடந்த சில காலமாகவே கிரீன்லாந்து மீது அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது. ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் தடுக்க அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து தேவைப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். டிரம்பின் இந்தக் கருத்துக்கு கிரீன்லாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தபோதிலும் டிரம்ப் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறார். மேலும், கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்காக அமெரிக்காவின் ராணுவத்தைப் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாக ட்ரம்ப் கூறியிருந்தார். ட்ரம்ப் கூறியது போல் கிரீன்லாந்தில் அமெரிக்கப் படைகள் இறங்கினால் அது சர்வதேச அளவில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்.
டிரம்ப்பின் கருத்துக்களால் ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என உலக நாடுகள் உற்றுக் கவனிக்க தொடங்கியுள்ளன. டிரம்ப்பின் இதுபோன்ற பேச்சுகள், நேட்டோ அமைப்பின் எதிர்காலம் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய நாடுகள் வேதனைத் தெரிவித்துள்ளன. அதாவது டென்மார்க் என்பது நேட்டோவின் உறுப்பு நாடாகும். ஒப்பந்தத்தின்படி, எந்தவொரு நேட்டோ உறுப்பு நாட்டின் மீதும், எந்தவொரு நாடு தாக்குதல் நடத்தினாலும் ஒட்டுமொத்த நேட்டோ அமைப்பும் அதற்கு எதிராக நிற்க வேண்டும். ஆனால், தற்போது அமெரிக்க ராணுவம் கிரீன்லாந்தை கைப்பற்ற முயற்சிப்பது, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் கூட்டணிக்கே எதிராக அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கிரீன்லாந்து தீவின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்குக் கணிசமான அளவுக்கு நேட்டோ ராணுவ வீரர்களை நிரந்தரமாக நிலைநிறுத்தத் திட்டமிட்டு வருவதாக டென்மார்க் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், சில ஐரோப்பிய நாடுகள் தங்கள் ராணுவ வீரர்களை கிரீன்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளன. இப்போது முதல் கட்டமாக ஐரோப்பிய வீரர்கள் கிரீன்லாந்திற்குச் சென்று சேர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, கிரீன்லாந்தில் வாழும் மக்களிடம் உணவு மற்றும் கலாச்சார ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தி, கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அரசு உறுதியாக தெரிவித்து வருகிறது. முதற்கட்டமாக, அமெரிக்காவின் சிறப்பு தூதர், வரும் மார்ச் மாதம் கிரீன்லாந்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். பொருளாதார தடைகள், வரி அதிகரிப்பு, ராணுவம் போன்ற மிரட்டல்களால் இன்னொரு நாட்டின் பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய துடிக்கும் அமெரிக்காவின் செயல் ஏற்கத்தக்கதல்ல என்றும் பல நாடுகள் விமர்சித்து வருகின்றன.
Follow Us