Advertisment

உயிருக்கு போராடிய இளைஞர்; பத்திரமாக மீட்ட ரயில்வே ஊழியர்கள்!

105

கோவில்பட்டி  பைபாஸ் இ.பி. காலனியை சேர்ந்த 29 வயதான  வீர பிரசாத் என்பவர் திருவாரூர் மாவட்டத்தில் சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்றிரவு  (ஜூன் 25ஆம் தேதி) கோவில்பட்டியில் இருந்து விருதுநகர் சென்று, பின்னர் அங்கிருந்து செங்கோட்டை - தாம்பரம் செல்லும் விரைவு ரயிலில் திருவாரூருக்கு செல்ல திட்டமிட்டு முன்பதிவு செய்திருந்துள்ளார்.

Advertisment

அதன்படி வீர பிரசாத், தனது மனைவி பிருந்தா மற்றும் ஒன்றரை வயது மகன் ஆகியோருடன் புறப்பட்டு நேற்றிரவு கோவில்பட்டி ரயில் நிலையம் வந்துள்ளார். அங்கு 2 ஆவது பிளாட்பார்ம்க்குள் மெதுவாக வந்த தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ்சில், வண்டி நிற்பதற்கு முன் அன் ரிசர்வ்டு பெட்டி அருகே ஓடிச்சென்று இடம் பிடிப்பதற்காக  கூட்ட நெரிசலில் வீர பிரசாத் முண்டியடித்துள்ளார். அப்போது படிக்கட்டில் கால் வைத்து ஏற முயன்ற வீர பிரசாத் திடீரென நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார். இதில் பிளாட்பார்ம்க்கும் ரயில் பெட்டிக்கும் இடைப்பட்ட இடைவெளியில் அவர் சிக்கி கூச்சலிட்டு உயிருக்கு போராடிய படி பரிதவித்தார்.

Advertisment

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த  அங்கிருந்த சக பயணிகளும், ரயில்வே ஊழியர்களும் உடனடியாக அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் பிளாட்பாரம் சிமெண்ட் கான்கிரீட்டை உடைத்தால் தான் பத்திரமாக காப்பாற்றி வெளியே மீட்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டதால்,   ரயில்வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு டிரில்லிங் மெஷின் கொண்டு வந்து அதன் மூலம் பிளாட்பார்ம் சிமெண்ட் கான்கிரீட்டை உடைத்து இரும்பு கம்பிகளை வளைத்து உயிருக்கு போராடிய வீர பிரசாத்தை பத்திரமாக காப்பாற்றி வெளியே மீட்டு கொண்டு வந்தனர். இடுப்பு மற்றும் காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு மயக்க நிலையில் இருந்த அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்  கோவில்பட்டி ரயில்வே ஸ்டேசனில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நின்று தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் இடம் பிடிப்பதற்காக ஏறிய போது தவறி கீழே விழுந்து ரயில் பெட்டிக்கு இடையே சிக்கி, லேசான காயங்களுடன் இளைஞர் உயிர் தப்பிய சம்பவம் காரணமாக கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் நேற்றிரவு பரபரப்பான சூழல் நிலவியது.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

Kovilpatti Train Indian Railway
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe