திருப்பூர் மாவட்டம், பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தம் அருகே.. கடந்த 18ம் தேதி அதிகாலை கூலித்தொழிலாளி ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில்.. ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த அப்பகுதி மக்கள்.. உடனடியாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் துணை கமிஷனர் கௌதம், உதவி ஆணையர் பிரதீப் குமார், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் ஸ்பாட்டுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அந்த பகுதியில் குப்பை சேகரிக்கும் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. சாலையில் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் இருந்து வெளியே போடப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து விற்று அதன் மூலம் வாழ்ந்து வந்துள்ளார். பகலில் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த அவர், இரவில் அங்குள்ள கடைகளுக்கு வெளியே படுத்துறங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட தொழிலாளி யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என எந்த விவரமும் தெரியவில்லை. இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்காக 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து.. தொழிலாளியை கொலை செய்த குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சூழலில், இரவு நேரத்தில் அரங்கேறி இருக்கும் இந்த கொடூர கொலையால் அப்பகுதி மக்கள் இரவில் வெளியில் செல்லவும் தயங்கி வருகின்றனர். சாலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளியை முகம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பது திருப்பூர் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us